நடப்பு நிகழ்வுகள் 24 ஜனவரி 2019
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- தமிழ்நாட்டின் இரண்டாவது ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2019’ (Global Investor Summit 2019) 23-24 ஜனவரி 2019 தினங்களில் சென்னையில் நடைபெறுகிறது.
- அக்டோபர் 2019 முதல், சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2019 வெளியீடு : பத்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான பல்வேறு அம்சங்களுடன், வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இந்தக் கொள்கையானது, சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் 23-1-2019 அன்று வெளியிடப்பட்டது.
இக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
- வானூர்தி மற்றும் ராணுவத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது.
- வானூர்திகளைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி அனைத்தையும் மேற்கொள்ள இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. பயணிகள் மற்றும் பாதுகாப்பு என இருபெரும் பிரிவுகளுக்கு வானூர்திகளை உற்பத்தி செய்யலாம். இந்தத் துறையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 35,656 கோடி முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் அளவை இரட்டிப்பாக்கவும் இக்கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- இக்கொள்கையின் வாயிலாக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
- வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தியில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒப்பந்த மற்றும் வெளிப்பணியின் மூலமாக நியமிக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தைத் தாண்டி இருக்கக் கூடாது.
- ஒப்பந்த மற்றும் வெளிப்பணி அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்கள் உற்பத்தி ஆலைகளுக்கு உள்ளேயே பணியமர்த்தப்பட வேண்டும்.
- தமிழகத்தில் எங்கெங்கு: வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்திக் கொள்கையின்படி சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி மாவட்டங்களில் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக்கான ஆலைகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கலாம்.
- வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக் கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்படும் தொழில் ஆலைகளுக்குத் தேவையான ரயில் போக்குவரத்து, சாலை, வான்வெளி போக்குவரத்து சேவைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தரும்.
இந்தியா
- ’கடல் கண்காணிப்பு’ (“Sea Vigil”) என்ற பெயரில் இருநாட்கள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை 22-23 ஜனவரி 2019 தினங்களில் இந்திய கடற்படையின் மூலம் நடத்தப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஒத்திகையில் முப்படைகளும் பங்கு பெறும் ‘டிராப்பெக்ஸ்’ (TROPEX (Theatre-level Readiness Operational Exercise) வகையைச் சார்ந்தது. இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கம் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கடல்வழி தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கான தயார்நிலையை உறுதி செய்வதாகும்.
- இரண்டாவது, ‘உலக ஒருங்கிணைந்த மருத்துவ மன்றம் 2019’ (World Integrated Medicine Forum 2019) 23-1-2019 அன்று கோவாவில் நடைபெற்றது.
- ’ஜியோதி பாஹினி’ (JOYTI BAHINI) என்ற பெயரில் முழுவதும் பெண்களைக் கொண்ட பிரிவு மத்திய இரயில்வே பாதுகாப்பு படையின் மூலம் கவுகாத்தியின் காம்க்யா இரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவற்றோர் பட்டியலில் சாதுக்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம் : சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி 23-1-2019 அன்று திறந்து வைத்தார். மேலும், ஜாலியன் வாலாபாக், முதல் உலகப் போர், 1857-ஆம் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திர போர், திரிஷ்யகலா கலை ஆகிய அருங்காட்சியகங்களையும் அவர் திறந்து வைத்தார்.இந்த 4 அருங்காட்சியகங்களும் இணைந்த வளாகம் கிராந்தி மந்திர் என்று அழைக்கப்படும்.
அருங்காட்சியகம் குறித்த தகவல்கள்:
- நேதாஜி மற்றும் இந்திய தேசிய ராணுவம்(ஐஎன்ஏ) அருங்காட்சியகத்தில் வீரர்கள் பயன்படுத்திய வாள், சீருடை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நேதாஜி மற்றும் ஐஎன்ஏ குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியகத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த நிகழ்வுகள் நினைவகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள், அவர்களது வீரம் ஆகியவை குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் உலகப்போர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட வீரர்கள் செய்த தியாகங்கள் குறித்து சரோஜினி நாயுடு எழுதிய கிப்ட் பாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் அருங்காட்சியகம், அந்தப் போரின் நிகழ்வுகள், போருக்காக இந்தியர்கள் செய்த தியாகங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- திரிஷ்யகலா கலை அருங்காட்சியகத்தில் 16-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா சுதந்திரமடையும் வரை இருந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரவி வர்மா மற்றும் அம்ரிதா செர்கில் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகம்
- 2019 ஆன் ஆண்டில் உலகம் எதிர் நோக்கியுள்ள 10 அபாயங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றில் காற்று மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் முதலிடத்தையும் கேன்சர், நீரழிவு மற்றும் இதய நோய் போன்ற தொற்றா நோய்கள் இரண்டாமிடத்தையும், இன்ஃபுளூவன்சா நோய் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
- ’ஆர்ரோவ் -3’ (Arrow 3) என்ற பெயரில் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணையை ( Anti-ballistic Missile) இஸ்ரேல் நாடு வெற்றிகரமாக சோதித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- IAFTX - 2019 (India Africa Field Training Exercise) என்ற பெயரில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி 18-27 மார்ச் 2019 தினங்களில் பூனே -வில் நடைபெறவுள்ளது.
- இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கிடையே உணவு பதப்படுத்துதல் தொழில் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 23-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்திய மற்றும் ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல் படைகளின் பேரிடர் கட்டுப்பாட்டு ஒத்திகை ஜப்பானின் ‘யோகோஹாமா’ (Yokohama) நகரில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில், இந்தியாவின் சார்பாக ICGS ஷானாக் (ICGS Shaunak) என்ற கடலோரக் காவல் கப்பல் பங்குபெற்றது.
- இந்தியா-குவைத் இடையேயான வீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை 23-1-19 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் குவைத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,00,000 வீட்டுவேலைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இவர்களில் 90,000 பெண்களும் அடங்குவர்.
பொருளாதாரம்
- உலகின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு பொருளாதாரங்களின் பட்டியலில் (Bloomberg 2019 Innovative Index) இந்தியா 54 வது இடத்தைப் பெற்றுள்ளது. Bloomberg அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே தென் கொரியா, ஜெர்மனி மற்றும் பின்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( Gross State Domestic Product (GSDP)) 3% வளர்ச்சி வீதத்துடன் பீகார் மாநிலம் முதலிடத்தையும், 11.2% வளர்ச்சி வீதத்துடன் ஆந்திரப்பிரதேசம் இரண்டாவது இடத்தையும், 11.1 % வளர்ச்சி வீதத்துடன் குஜராத் மூன்றாவது இடத்தையும், தெலுங்கானா(10.4%) நான்காவது இடத்தையும், கர்நாடகா (9.3%) ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன. தமிழ்நாடு 8.1% வளர்ச்சி வீதத்துடன் 7 வது இடத்தைப் பெற்றுள்ளது. 2018 ஆம் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு CRISIL (Credit Rating Information Services of India Limited) என்ற தனியார் ஆராய்ச்சி அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
- சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (Goods and Services Tax Appellate Tribunal (GSTAT)) தேசிய அமர்வை (ஜிஎஸ்டிஏடி) உருவாக்க மத்திய அமைச்சரவை 23-1-2019 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய பெஞ்ச் புதுதில்லியில் அமைக்கப்படும். இதற்கு அதன் தலைவர் தலைமை தாங்குவார். மத்திய அரசிலிருந்து ஒரு தொழில்நுட்ப உறுப்பினரும், மாநில அரசிலிருந்து ஒரு தொழில்நுட்ப உறுப்பினரும் இதில் இடம்பெற்றிருப்பார்கள்.
நியமனங்கள்
- மத்திய இடைக்கால நிதியமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவப் பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றுள்ளதையடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
- தேசியப் பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24 | மையக்கருத்து - “ஒளிமயமான எதிர்காலத்திற்காகப் பெண்குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்தல்” (Empowering Girls for a Brighter Tomorrow)
விருதுகள்
- 27வது ’சரஸ்வதி சம்மன் 2017’ (Saraswati Samman) விருது குஜராத்தி மொழி கவிஞர் சிதன்ஷு யாஷ்சந்திரா (Sitanshu Yashaschandra) வுக்கு, அவரது, ’வக்கார்’ (Vakhar) எனும் கவிதை தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
- கூ.தக. : சரஸ்வதி சம்மன் விருதை பிர்லா பவுண்டேஷன் அமைப்பு (KK Birla Foundation) வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்’ (Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar) என்ற புதிய விருதை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பேரிடர் காலங்களில் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
- இந்த ஆண்டுக்கான (2019) இவ்விருதுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 18–வது பட்டாலியன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்ட இப்படைப்பிரிவு, 2015–ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்பட பல பேரிடர்களின்போது சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டுக்கள்
- 100 ஒருநாள் கிரிக்கெட் விக்கெட்டுகளை விரைவாக எடுத்த கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை இந்தியாவின் மொஹம்மத் ஷாமி பெற்றுள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
- ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் 24-1-2019 அன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 'மைக்ரோசாட் - ஆர்' நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளாகும். ‘கலாம் சாட்’ எனும் 34 கிராம் எடையிலான சிறிய செயற்கைக்கோளை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
- பூமியில் இருந்து 274.12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோளும், 450 கிலோ மீட்டர் தூரத்தில் ‘கலாம் சாட்’ செயற்கை கோளும் நிலைநிறுத்தப்படுகிறது.
- ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கை கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.