தமிழ்நாடு
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- பல மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம், பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் ஏழை-எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலாரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அதன்படி, விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி, விசைத்தறி, கைத்தறி, கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு, மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும்.
- இந்த அறிவிப்பால், கிராமப்புறங்களில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும் என மொத்தம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவியைப் பெறுவர். இதற்கென, ரூ.1,200 கோடி நிகழ் நிதியாண்டின் (2018-19) துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்தியா
- இந்தியப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் திருமணத்தை 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் ”வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணப் பதிவு மசோதா 2019" மாநிலங்களவையில் 11-02-2019 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் படி, இந்திய பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 நாள்களுக்குள் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வதற்கு அல்லது ரத்து செய்வதற்கு கடவுச்சீட்டு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்தியப் பெண்களை திருமணம் செய்பவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
- நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 12-2-2019 அன்று திறந்து வைத்தார்.
- உலகிலேயே முதன் முறையாக குருக்ஷேத்திராவில் அமையவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஆயுஷ் பல்கலை கழகத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் 12-1-2019 அன்று அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலை கழகம் ரூ.475 கோடி மதிப்பில் 94.5 ஏக்கரில் கட்டி முடிக்கப்படும். இதன்பின் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திற்கான கல்வி மற்றும் சிகிச்சை வசதி இங்கு வழங்கப்படும்.
- குருக்ஷேத்திராவின் ஜஜ்ஜார் நகரில் பாத்சா கிராமத்தில் ரூ.2,035 கோடி மதிப்பிலான தேசிய புற்றுநோய் மையம் ஒன்றையும் இன்று தொடங்கி வைத்துள்ளார். இங்கு அனைத்து நிலை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக 710 படுக்கைகள் உள்ளன.
- மூன்றாவது, தூய்மை சக்தி 2019 (Swachh Shakti 2019) மாநாடு 12 பிப்ரவரி 2019 அன்று ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடைபெற்றது. தூய்மை பாரதம் இயக்கத்தில் ஊரகப் பெண்கள், தலைமையேற்று மேற்கொள்ளும் பணிகள் குறித்து கவனம் ஈர்ப்பதே தூய்மை சக்தி 2019 என்ற தேசிய நிகழ்வின் நோக்கமாகும். நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவிகளும், பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக்க் கொண்ட இந்நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
கூ.தக. :
- தூய்மை சக்தியின் முதல் நிகழ்ச்சியை, குஜராத் காந்தி நகரில், 2017 ஆம் ஆண்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
- இரண்டாவது தூய்மை சக்தி நிகழ்வு, 2017-ல் உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்றது
- அக்டோபர் 2, 2019-க்குள் தூய்மையான மற்றும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக அக்டோபர் 2, 2014 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்த தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகம்
- ’ஆப்பிரிக்க யூனியன்’ (African Union) அமைப்பின் புதிய தலைவராக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபாதா எல் சிஷி (Abdel Fattah El Sisi) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- கூ.தக: தற்போது சுமார் 55 ஆப்பிரிக்க நாடுகள் உறுப்பினர்களாகவுள்ள இந்த அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். இவ்வமைப்பின் தலைமையிடம் எத்தியோப்பியா நாட்டின் ‘அடிடிஸ் அபாபா (Addis Ababa) நகரில் அமைந்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
- அபுதாபியில் முதல் இந்து கோயில்: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அமையவுள்ள முதல் ஹிந்து கோயிலுக்கு வரும் ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2015-ஆம் ஆண்டு அமீரகத்துக்கு சென்றபோது, இந்த கோயில் அமைப்பதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. போச்சாசன்வசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்தா என்ற சர்வதேச ஹிந்து அமைப்பு இந்தக் கோயிலைக் கட்டுகிறது.
நியமனங்கள்
- பூட்டான் நாட்டிற்கான இந்திய தூதராக ருச்சிரா காம்போஜ் (Ruchira Kamboj) நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- உலக நோயாளிகள் தினம் (World Day of the Sick) - பிப்ரவரி 11
- அறிவியலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) - பிப்ரவரி 11 | மையக்கருத்து (2019) - நீடித்த பசுமை வளர்ச்சிக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அறிவியலில் முதலீடு (Investment in Women and Girls in Science for Inclusive Green Growth)
விருதுகள்
- பிரிட்டன்-இந்தியா சமூக பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் சென்னை ஐஐடி, முதல் பரிசை பெற்றுள்ளது.
- கழிவு மேலாண்மையில் சர்வதேச அளவில் எழுந்துவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், அதுதொடர்பான ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கு நிதி உள்ளிட்ட ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் இந்த மதிப்புமிக்க பிரிட்டன்-இந்தியா சமூகப் பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில், சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கண்டுபிடிப்பை உருவாக்கிய சென்னை ஐஐடி குழு முதல் பரிசு பெற்றது.
- கட்டுமான கழிவுகளிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான செங்கல்லை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது.
விளையாட்டுக்கள்
- சென்னை ஓபன் ஏ.டி.பி போட்டியில் (Chennai Open ATP Challenger) பிரான்ஸ் நாட்டின் கோரெண்டின் மோடெட் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரீவ் ஹாரிஸை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார்.
- ’எம்.ஆர்.எஃப் சாலஞ்ச் பட்டத்தை’ (MRF Challenge title ) வென்ற முதல் பெண் ஓட்டுநர் எனும் பெருமையை இங்கிலாந்தின் ஜாமி சாட்விக் (Jamie Chadwick) பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.