தமிழ்நாடு
- ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவினை சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான 5 புதிய திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது . அதன்படி,
- அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இத்தொகை ஏதுவாக அமையும்.
- பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், அரசு, தாய் தந்தை நிலையிலிருந்து அவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.
- பெண் சிசு கொலைகளை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டத்தினை நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில், பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்.
- சமூக பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கும், காப்பகங்களில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறிய இல்லவாசிகளுக்கும், சமூக பாதுகாப்புத் துறையில் சி மற்றும் டி பிரிவில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் எல்லைக்கு உட்படாத காலிப் பணியிடங்களில் பணியமர்த்த தற்போது அரசாணை உள்ளது.
- அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள, முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் கீழ் இயங்கும், சமூக நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத சி மற்றும் டி பிரிவு பணியிடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். இதைத் தவிர, சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-2-2020 அன்று தொடங்கி வைத்தார்.
- சென்னை ஐஐடி-யின் 20 ஆராய்ச்சி ஆய்வகங்கள் 20 கிராமப்புற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.பள்ளி மாணவா்களிடையே ஆராய்ச்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சென்னை ஐஐடி-யின் ‘ஒரு ஆய்வகம் - ஒரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் வெரிசோன் இந்தியா நிறுவனத்தின் நிதியுதவியுடன், இந்த விழிப்புணா்வு வழிகாட்டுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐஐடி-யின் இந்த வழிகாட்டுதல் குழுவில் எம்.எஸ்., எம்.டெக். மற்றும் ஆராய்ச்சி மாணவா்களும், பேராசிரியா்களும் இடம்பெற்றிருப்பா். இந்தக் குழுவினா், அவா்கள் தத்தெடுத்திருக்கும் கிராமப்புற அரசுப் பள்ளிக்குச் சென்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அயா்ன் பாக்ஸ், காலிங் பெல், வேகம் கிளீனா் உள்ளிட்ட கருவிகளைப் பிரித்தல் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்தல் குறித்து கற்றுத் தருவதோடு, மாணவா்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதிலளித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
- பிரபல தவுல் வித்வான் டி. ஏ. கலியமூர்த்தி 19-2-2020 அன்று காலமானார். நாகை மாவட்ட மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூரைச் சேர்ந்த இவர் தமிழக அரசின் கலைமாமணி மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
- சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கான தேர்வில் நீலகிரி மாவட்டம், குன்னூர், ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர் லாரன்ஸ் (32) வெற்றி பெற்றுள்ளார்.
- தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா 13-02-2020 அன்று நிறைவேறியது.'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவில், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா
- 22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 19-2-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றாண்டு காலத்துக்கு செயல்படும் சட்ட ஆணையத்தில் மத்திய அரசு முன்வைக்கும் விவகாரங்களைத் தவிர, சட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளும். மேலும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பற்றிய யோசனைகள் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படும். புதிதாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் குறித்தும் இந்த ஆணையம் ஆய்வு செய்யும். நீதி வழங்குவதற்கான வழிமுறைகளில் நிலவும் தாமதத்தை களைவது, வழக்குகளை விரைந்து முடிப்பது, வழக்கிற்கான செலவைக் குறைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான ஆய்வு, ஆராய்ச்சி ஆகியவற்றை ஆணையம் மேற்கொள்ளும். மேலும், பயனில்லாத அல்லது பொருத்தமற்ற, உடனடியாக நீக்கப்பட வேண்டிய சட்டங்களை அடையாளம் காண்பதுடன், அவசியமான சட்டங்களைப் பரிந்துரைப்பது, ஏழைகளுக்கு சேவை செய்யும் வகையில் சட்ட ரீதியான செயல்பாட்டை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படும்.
- அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையின் ( ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ ) தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலராக சாம்பத் ராய் தோ்வாகியுள்ளார்.
- வடக்கு கர்நாடகத்திலுள்ள லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா (33) என்ற முஸ்லிம் இளைஞர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
- இந்தியாவில் இரட்டிப்பானது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை : உலகிலேயே ஆசிய சிங்கங்களுக்கான ஒரே வாழ்விடமாக இருக்கும் குஜராத் மாநிலத்தின் கிர் தேசிய பூங்காவில் அத்தகைய சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 100 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
- ஏப்ரல் 1 முதல் ‘பாரத் நிலை -IV' (Bharat Stage (BS-VI)) க்கு மாறுவதன் மூலம், இந்தியா உலகின் மிகவும் தூய்மையான பெட்ரோல் டீசலுக்கு மாற உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள பாரத் நிலை - IV (BS-IV) நிலையிலிருந்து நேரடியாக ‘பாரத் நிலை -IV' (Bharat Stage (BS-VI)) க்கு மாறுவது குறிப்பிடத்தகக்து,
- இந்தியா 2010 இல் 350 பிபிஎம் சல்பர் உள்ளடக்கத்துடன் பாரத் ஸ்டேஜ்- 3 தர எரிபொருளை ஏற்றுக்கொண்டது, பின்னர் 50 பிபிஎம் சல்பர் உள்ளடக்கத்தைக் கொண்ட பாரத் ஸ்டேஜ்- 4 தரத்துக்கு மாற ஏழு ஆண்டுகள் ஆனது. பாரத் ஸ்டேஜ்- 4 முதல் பாரத் ஸ்டேஜ்- 6 தரத்துக்கு மாற மூன்று வருடங்கள் மட்டுமே ஆகி உள்ளது. இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள எந்த பெரிய பொருளாதார நாட்டிலும் காணப்படவில்லை .
- யுனிசெஃப் (UNICEF) அமைப்பு வெளியிட்டுள்ள ’உலக குழந்தைகள் எதிர்காலம் தொடர்பான குழுவின் அறிக்கையில்’ (“A future for the world’s children? A WHO–UNICEF–Lancet Commission”) குழந்தைகள் நலனில் நீடித்த வளர்ச்சி (sustainability) பிரிவில் 77 வது இடத்தையும், வளப் பட்டியலில் (flourishing index) 131 வது இடத்தையும் பெற்றுள்ளது.
- உலகளவிலான எதிர்காலக் கல்வி குறியீடு 2019 (Worldwide Education for The Future Index (WEFFI) 2019) ல் இந்தியா 35 வது இடத்தைப் பெற்றுள்ளது. Economist Intelligence unit வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் பெற்றுள்ளன.
வெளிநாட்டு உறவுகள்
- இலங்கையின் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி அளிக்கிறது. விரைவில் இது தொடர்பாக இலங்கையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
- இந்தியா - மியான்மர் பேருந்து சேவை , மணிப்பூர் மாநிலம் இம்பாலிலிருந்து - மியான்மர் நாட்டின் மாண்டாலே (Mandalay) நகரங்களுக்கிடையே 1 ஏப்ரல் 2020 முதல் தொடங்கவுள்ளது.
சர்வதேசம்
- அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய அமெரிக்கா் ஸ்ரீ சீனிவாசன்(52) நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை நீதபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் தெற்காசிய நபா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
- உலக தாய்மொழி தினம் - பிப்ரவரி 21 | மையக்கருத்து 2020 - எல்லைகளற்ற மொழிகள் ( ‘Languages without borders’)
- உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice) - பிப்ரவரி 20
நியமனங்கள்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விமல் ஜுல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.