நடப்பு நிகழ்வுகள் 12-20 செப்டம்பர் 2020
தமிழ்நாடு
- ☞தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 யை (Tamilnadu Cyber Security Policy 2020) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 19-9-2020 அன்று வெளியிட்டுள்ளார்கள். இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்திய கனெக்ட் (CII Conect 2020) மாநாட்டின் போது வெளியிடப்பட்டுள்ள , இந்தக் கொள்கையின் மூலம் மாநிலத்தில் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும்.
- ☞தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 யை (Tamil Nadu Blockchain Policy 2020) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 19-9-2020 அன்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்திய கனெக்ட் (CII Conect 2020) மாநாட்டின் போது வெளியிட்டுள்ளார்கள். அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத் திட்டங்களை இணையவழியில் நம்பகத் தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்திட உதவும் இந்த கொள்கையை வெளியிட்டுள்ளதன் மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணையக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
- ☞தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 (Tamil Nadu Safe and Ethical Artificial Intelligence Policy 2020) ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 19-9-2020 அன்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்திய கனெக்ட் (CII Conect 2020) மாநாட்டின் போது வெளியிட்டுள்ளார்கள். இதன்மூலம், வெளிப்படையான ஆளுமை மற்றும் வளா்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழகம் எளிதாக எட்ட இயலும்.
- ☞பொதுத் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருது, பதிவுத் துறைத் தலைவா் ஜோதி நிர்மலாவுக்கு வழங்கப்பட்டது. இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்திய கனெக்ட் (CII Conect 2020) மாநாட்டின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
- ☞தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்யும் சட்டம், 2009 (Tamil Nadu Registration of Marriages Act, 2009) திருத்த மசோதா 16-9-2020 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலம் மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணங்களை பதிவு செய்ய உதவுகிறது. தற்போது உள்ள நடைமுறையின்படி, திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.
- ☞முதலமைச்சரை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக்கும் , சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய சட்டம் 2010 (Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA) Act, 2010) (திருத்தம்) 16-9-2020 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின் படி, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் தலைவராக முதலமைச்சரையும், உறுப்பினர்களாக , வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சிஎம்டிஏ) துணைத் தலைவர் ஆகியோரும் இருப்பார். 2010 ஆம் ஆண்டில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த குழுவில் போக்குவரத்து அமைச்சரை தலைவராகவும், தலைமை செயலாளராகவும், சிஎம்டிஏவின் துணைத் தலைவராகவும் முன்னாள் அலுவலர்களாக இருந்தனர். தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருடன், வீடு, போக்குவரத்து, மாநில நிதி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும் இதில் இருந்தனர்.
- ☞இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் (ஐ.சி.எம்.ஆர்.) இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான சி.எ.எச்.ஓ. அமைப்பு சார்பில், மருத்துவமனைகளில் பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டிகளில் , மிகப்பெரிய அளவிலான மருத்துவமனை பிரிவில் வேலூரை சேர்ந்த சி.எம்.சி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து 300 முதல் 600 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை பிரிவில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பிடித்துள்ளது.
- ☞எளிதாக தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 14வது இடத்தைப் பெற்றுள்ளது. மாநில தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2019 அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கன்ட் மாநிலங்கள் பெற்றுள்ளன.
- ☞உலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம் எனும் அமைப்பை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு உருவாக்கியுள்ளது. உலகத் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும், அதன் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு அந்தந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துத் தீர்வு காணவும் ஏதுவாக 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் 147 பேரை ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- ☞வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூ.தக. :
- 1992-ம் ஆண்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது.
- இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஒரு முன்னோடித் திட்டமாக 6.3.2019 முதல் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவையும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ☞மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் 15-9-2020 நிறைவேற்றப்பட்டது.
- கூ.தக. : மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசன் குழு 10% வழங்க பரிந்துரைத்த நிலையில், தமிழக அரசு 7.5% அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
- ☞பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா 2020 (Salary, Allowances and Pension of Members of Parliament (Amendment) Bill, 2020) மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றியது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதிய சட்டம், 1954 (Salary, Allowances and Pension of Members of Parliament Act, 1954 ) ல் திருத்தம் மேற்கொள்ளும் இந்த மசோதா பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை 30 சதவீதம் குறைக்கிறது. இது ஏப்ரல் 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.
- ☞எட்டு இந்திய கடற்கரைகள் சர்வதேச நீலக்கொடி சுற்றுசூழல் அடையாளத்திற்கு (Blue Flag International Eco-Label ) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சிவ்ராஜ்பூர், கர்நாடகாவில் கசர்கோட் மற்றும் படுபிட்ரி, ஒடிசாவின் கோல்டன் பீச், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ராதா நகர், டாமன் மற்றும் டியூவில் கோக்லா, கேரளாவில் கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ள எட்டு கடற்கரைகளாகும்.
- ☞K.N. தீக்சித் (K.N. Dikshit ) குழு : 12000 ஆண்டு பழமையான இந்திய கலாச்சாரத்தை பற்றி ஆராய K.N. தீக்சித் (K.N. Dikshit ) (இந்திய அகழ்வாய்வு சங்கத்தின் (Indian Archaeological Society) தலைவர்) தலைமையில் வல்லுநர் குழுவை மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ளது.
- ☞இந்தியாவின் முதல் தனியார் ஜெட் விமானங்களுக்கான பொது விமானப்போக்குவரத்து முனையம் (India’s first General Aviation Terminal) புது தில்லியிலுள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில்17-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- ☞ராஜேஸ் பாண்ட் குழு : சீன நிறுவனங்கள் இந்தியாவில் உளவு பார்த்த விவகாரத்தைப் பற்றி ஆராய தேசிய இணைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (National Cyber Security Coordinator (NCSC) ) லெப்டினண்ட் ஜெனெரல் ராஜேஸ் பாண்ட் (Lt General (retd)Rajesh Pant) தலைமையிலான குழுவை மத்திய அரசு 16-9-2020 அன்று அமைத்துள்ளது.
- ☞அஜய் திர்கி குழு (Ajay Tirkey Committee) : விவசாய நில குத்தகைகளை ஒழுங்குபடுத்துவதற்கான உயர்மட்ட குழுவை அஜய் திர்கி தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ளது.
- ☞உலக வங்கி வெளியிட்டுள்ள “மனித மூலதன குறியீடு 2020” (Human Capital Index 2020) ல் இந்தியா 116 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகள் பெற்றுள்ளன.
- ☞4வது உலக ஆயுர்வேத கூடுகை ( Global Ayurveda Summit ) 15-9-2020 அன்று ‘நோய்தொற்று காலத்தில் வளர்ந்து வரும் ஆயுர்வேத மருத்துவத்திற்கான் வாய்ப்புகள்’ (Emerging Opportunities for Ayurveda during Pandemic) இணையவழியில் நடைபெற்றது. இதனை இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு, கேரளா மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்தின.
- ☞”i-ATS” என்ற பெயரில் இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ”தானியங்கி இரயில் கண்காணிப்பு முறைமை” (Automatic Train Supervision) புது தில்லி மெட்ரோவில்15-9-2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ☞'ஆயுத தயாரிப்பாலை வாரியத்தை' (Ordnance Factory Board) நிறுவனமயமாக்குதலை (Corporatisation) மேற்பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் தலைமையில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு (Empowered Group of Ministers (EGoM)) அமைக்கப்பட்டுள்ளது.
- ☞"காரிமா" (GARIMA) என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தை ஓடிஸா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ☞"ஐந்து நட்சத்திர கிராமங்கள்" (“Five Star Villages”)என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் 100% கிராமங்களிலும் இந்திய அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் சென்றடைய செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- ☞பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ள ஐந்து ரபெல் ரக போர் விமானங்களும் (Rafale Aircrafts) , இந்திய விமானப்படையின் ஹரியானாவிலுள்ள அம்பாலா ( Ambala ) படை தளத்திலுள்ள‘Golden Arrows’ பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன.
- ☞'ஏரோ இந்தியா 2021' (Aero India-21) என்ற பெயரிலான 13 வது விமானப்படைக் கண்காட்சி பெங்களூரு நகரில் 3-7 பிப்ரவரி 2021 தினங்களில் நடைபெறவுள்ளது.
- ☞ரஷியாவின் ஸ்புட்னிக்-5 (Sputnik V)என்ற பெயரிலான கோவிட்-19 தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு (Dr. Reddy’s Laboratories) 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது கஜகஸ்தான், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை வழங்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது..
- ☞ஏ-சாட் (மிஷன் சக்தி)செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றியின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
- கூ.தக. : ’ஏ-சாட்’செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை, ஒடிஸாவில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் தீவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) கடந்த 2019 ஆம் ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தியது. இந்த பரிசோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ☞ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மசோதா 2020, மாநிலங்களவையில் 16-9-2020 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதன் மூலம், குஜராத் ஜாம் நகரில் நவீன ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ITRA) அமையவும், அதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்(INI) அந்தஸ்து கிடைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
- ☞குஜராத் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது இருக்கும் ஆயுர்வேத நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி மையம் (ITRA) நிறுவப்படவுள்ளது.
- இது மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தொகுப்பாக இருக்கும். அதாவது, (a) ஆயுர்வேத முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (b) ஸ்ரீ குலாப் குன்வெர்பா ஆயுர்வேத மகாவித்யாலயா மற்றும் (c) ஆயுர்வேத மருந்து அறிவியல் நிறுவனம், (d) யோகா இயற்கை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான மகரிஷி பதஞ்சலி நிறுவனம் போன்றவற்றின் தொகுப்பு. கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நிறுவனங்கள், ஆயுர்வேத நிறுவனங்களின் தனித்துவமான குடும்பத்தை ஒன்றாக இணைத்துள்ளன.
- பல்வேறு ஆயுர்வேத நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பால், ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி மையம், ஆயுர்வேத துறையில் கலங்கரை விளக்கமாகத் திகழும். ஆயுர்வேதத்தின் அனைத்து துறைகளிலும், இந்த மையம், உயர்தரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆயுஷ் துறையில் ஐஎன்ஐ அந்தஸ்துடன் இருக்கும் முதல் நிறுவனமாக ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் இருக்கும்.
- ☞அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்த மசோதா -2020 மக்களவையில் 15-9-2020 அன்று நிறைவேறியது. இதன் மூலம் 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தானிய வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதிலும் இருப்பு வைப்பதிலும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.இதன் மூலம் தங்களது நடவடிக்கைகளில் அரசின் கண்காணிப்பு அமைப்புகள் அதிக குறுக்கீடுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சமின்றி தனியாா் முதலீட்டாளா்கள் விவசாயத் துறையில் செயல்பட முடியும்.
- ☞பிகார் மாநிலம், தா்பங்கா மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை 15-9-2020 அன்று ஒப்புதல் அளித்தது. பீகார் தலைநகா் பாட்னாவில் ஏற்கெனவே எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
- ☞சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ☞அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் தேசிய நீரோட்டத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களின் பயன்கள், நாட்டின் பிற பகுதிகளை சோ்ந்த குடிமக்களை போல் இவ்விரு யூனியன் பிரதேச மக்களுக்கும் கிடைக்கும். மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்களால் இரு யூனியன் பிரதேசங்களிலும் சமூக பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அங்குள்ள மக்களை வலிமையாக்கி, அவா்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதுடன் நோ்மையற்ற சட்டங்களை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்துள்ளது. இரு யூனியன் பிரதேசங்களும் அமைதி மற்றும் வளா்ச்சிப் பாதையில் செல்ல இந்த மாற்றங்கள் வழிகாட்டுகின்றன.
- ☞விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உள்ளிட்ட நிா்வாக அமைப்புகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கான ‘விமானப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதா - 2020’நாடாளுமன்றத்தில் 15-9-2020 அன்று நிறைவேற்றப்பட்டது.பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் விமான நிறுவனங்களுக்கான அபராதத்தை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயா்த்துவதற்கும் விமானப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதா வழிவகுக்கிறது.
- ☞கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அபராதம் ரூ.2,000-லிருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை விவகாரங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அத்தகையோருக்கான அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாகவே இருக்கும்.
- ☞புதிய பாராளுமன்றம் கட்டும் பணியை டாடா நிறுவனம் ரூ. 861.90 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது.
- ☞ஆக்ராவின் முகலாயர் அருங்காட்சியத்தின் பெயர் ‘சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ அருங்காட்சியகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ☞நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம்:
- கரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் 14-9-2020 அன்று அறிமுகம் செய்தாா்.நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்-2020 என்ற அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம் செய்யப்பட்டது.
- கரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதியம் சட்டம் - 1954-இல் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலும் இந்த அறிமுகம் செய்யப்படுகிறது.
- ☞திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 14001-2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
- ☞உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய மன்னர் சிவாஜியின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
- ☞வங்கிகள் கட்டுப்பாடு (திருத்த) மசோதா மக்களவையில் 14-9-2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளா்களின் நலன்களைக் காக்கும் வகையிலும், கூட்டுறவு வங்கிகளின் நலன்களைக் காக்கும் வகையிலும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதாகவும், ஏற்கெனவே உள்ள வங்கிகள் எத்தகைய கட்டுப்பாடுகளுடன் செயல்படுகிறதோ, அதே கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த மசோதாவின் மூலம் கொண்டு வரப்படுகின்றன எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- ☞மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ளார். பிகாா் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சோ்ந்த இவா், முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு மாநிலங்களவை துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
- ☞விமான சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் 15-9-2020 நிறைவேற்றப்பட்டது.இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் விமான நிலையங்களுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது போன்ற விமான போக்குவரத்து தொடர்பான விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது.
உலகம்
- ☞”உலக திறன்மிகு நகரங்கள் பட்டியல் 2020” (Smart City Index 2020) ல் முதலிடத்தை சிங்கப்பூர் நகரம் வென்றுள்ளது.2 மற்றும் 3 ஆம் இடங்களை முறையே ஹெல்சிங்கி(பின்லாந்து) மற்றும் சூரிச் (சுவிட்சர்லாந்து) நகரங்கள் பெற்றுள்ளன.
- ☞நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான (Sustainable Development Goals) 890 மில்லியன் டாலர் மதிப்பிலான 7 ஆண்டுகளுக்கான முதலீட்டு பத்திரத்தை மெக்சிகோ நாடு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், நீடித்த வளர்ச்சி இலக்கிற்காக இம்மாதிரி பத்திரத்தை வெளியிட்டுள்ள உலகின் முதல் நாடு எனும் பெருமையை மெக்சிகோ பெற்றுள்ளது.
- ☞எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவைப் பேண பஹ்ரைன் முன் வந்துள்ளது.அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- ☞‘சால்லி என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களை 16-9-2020 அன்று தாக்கியது.
- ☞சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- ☞ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ☞ஐ.நா. பொதுச் சபையின் 75-ஆவது கூட்டம், கரோனா நெருக்கடி காரணமாக, முதல் முறையாக காணொலி முறையில் 15-9-2020 அன்று தொடங்கியது.
வெளிநாட்டு உறவுகள்
- ☞மாலத்தீவிற்கு 250 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி : கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசாங்கத்தின் சார்பில் மாலத்தீவிற்கு 250 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது மாலத்தீவு அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமான விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுவதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியை கருவூலப் பத்திர விற்பனை மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ☞"டிஜிபோடி நடத்தை விதிகள்” (Djibouti Code of Conduct) அல்லது “ஜெட்டா திருத்தம்” (Jeddah Amendment ) எனப்படும், இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு சார்ந்த சர்வதேச நாடுகளின் குழுவில் பார்வையாளராக இந்தியா இணைந்துள்ளது.
- ☞'ஆசியான் - இந்தியா அமைச்சர்கள் கூடுகை' (ASEAN-India Ministerial Meeting) 12-9-2020 அன்று இணையவழியில் நடைபெற்றது. இக்கூடுகையில் , இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இக்கூடுகையின் போது 'புதிய ஆசியான் - இந்தியா செயல் திட்டம் 2021-2025-' (New ASEAN-India Plan of Action) கையெழுத்தானது.
- ☞ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதிநிதி பொய்யான வரைபடத்தை காண்பித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.
- ☞ஐ.நா. மகளிர் நிலை ஆணையத்தின் ( UN’s Commission on Status of Women ) உறுப்பினர்களுக்கான முக்கிய தேர்தலில், கடும் போட்டிகளுக்கு இடையே சீனாவை வென்று இந்தியா உறுப்பினராக தேர்வு பெற்றது.
- ஐ.நா. மகளிர் நிலை ஆணையம் ஐ.நா. பொருளாதார - சமூக கவுன்சிலின் கீழ் செயல்படும் அமைப்பாகும். இதன் தலைமையிடம் நியுயார்க்கில் உள்ளது.
- ☞ஐ.நா. பொருளாதார - சமூக கவுன்சில் தேர்தலில் இந்தியா , ஆப்கானிஸ்தான் வெற்றி :கவுன்சி 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார - சமூக கவுன்சிலின் 2021-ஆம் ஆண்டு அமர்வுக்கான முதல் வருடாந்திரக் கூட்டம் 14-9-2020 அன்று நடைபெற்றது. அப்போது, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் பிரிவில் இரு இடங்களுக்கான உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. அதில், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா களமிறங்கின.அதில், ஆப்கானிஸ்தான் 39 வாக்குகளையும், இந்தியா 38 வாக்குகளையும் பெற்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாக விளங்கும் சீனா 27 வாக்குகளை மட்டுமே பெற்றது.
பொருளாதாரம்
- ☞‘திவால் சட்டம் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2020’ மாநிலங்களவையில் 19-9-2020 அன்று நிறைவேறியது இதன் மூலம் .திவாலாகும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க உத்தரவாதம் அளித்தவா்கள் ஆகியோர் மீதான நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் திவால் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ☞“டைட்டன் பே” (Titan Pay) என்ற பெயரில் இந்தியாவின் முதல் தொடர்பற்ற பணப்பரிமாற்ற கைக்கடிகாரத்தை (Contactless Payment Watch) ஸ்டேட் ஃபாங்க் ஆஃப் இந்தியா மற்றும் டைட்டன் நிறுவனம் (Titan Company Limited) இணைந்து 16-9-2020 அன்று வெளியிட்டுள்ளன.
- ☞எளிதாக தொழில் தொடங்கும் சூழலுக்கு உதவிடும் இந்திய மாநிலங்களின் பட்டியல் 2019(‘States on Support to Startup Ecosystems 2019′)ஐ மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் , மாநிலங்களில் முதலிடத்தை குஜராத் மாநிலமும், யுனியன் பிரதேசங்களில் முதலிடத்தை அந்தமான் நிக்கோபார் தீவுகளும் பெற்றுள்ளன.
- ☞வங்கிகளில் 'தலைமை இணக்க அதிகாரி' (Chief Compliance Officers) எனும் புதிய பதவியை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- ☞பொருளாதார சுதந்திர பட்டியல் 2020 (Economic Freedom Index) ல் இந்தியா 105வது இடத்தைப் பெற்றுள்ளது. கனடாவிலுள்ள 'ஃபிரேசர் நிறுவனம்' (Fraser Institute) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மஊன்று இடங்களை முறையே ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
- ☞“iStartup 2.0” என்ற பெயரில் புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கான பிரத்தியெக மற்றும் முழுமையான வங்கி சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
- ☞கோவிட்-19 சூழலில் 'கடன் தவணை தள்ளிவைப்பு கால வட்டியை தள்ளுபடி செய்வதன் விளைவுகளைப் (Impacts of Waiving Loan Moratorium) பற்றி ஆராய ராஜீவ் மெக்ரிஷி (Rajiv Mehrishi ) தலைமையில் வல்லுநர் குழுவை மத்திய நிதி அமைச்சகம் 10-19-2020 அன்று அமைத்துள்ளது.
விருதுகள்
- ☞ஐ.நா. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுக்கான இளம் தலைவர்கள் பட்டியல் 2020 ( United Nations in the list of 2020 Class of Young Leaders for Sustainable Development Goals)ல் இந்தியாவைச் சேர்ந்த உதித் சிங்கால் (Udit Singhal) எனும் 18 வயது சிறுவன் இடம் பெற்றுள்ளார். இவர் ’Glass2Sand’ என்ற நிறுவனத்தை துவங்கி கண்ணாடி பாட்டில்களை முழுவதுமாக மறுசுழற்சி செய்து சிலிக்கா மணலாக மாற்றும் சேவையை செய்துவருகிறார்.
- ☞77வது 'வெனிஸ் திரைப்படத் திருவிழா 2020' (Venice Film Festival 2020) ல் சிறந்த ஸ்கிரீன் பிளே -க்கான விருது "The Disciple” எனும் மராத்திய மொழி திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதனை சைத்தன்யா தமானே (Chaitanya Tamhane) இயக்கியுள்ளார்.
- ☞மேற்கு வங்க மாநிலத்தின் 'சபூஜ் சதி திட்டத்திற்கு' ( Sabooj Sathi Project ) , சிறந்த மின்னாளுமைத் திட்டத்திற்கான, உலக தகவல் சமூக பரிசு (World Summit on the Information Society (WSIS) prize) வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில அரசின் 'சபூஜ் சதி திட்டம்' என்பது, 9 - 12 வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும்.
- ☞'அனைத்து குழந்தைகளுக்கும்' ( ‘For Every Child’ ) எனும் குழந்தைகள் உரிமைகள் பற்றிய ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் (UNICEF) பரப்புரைக்கு இந்தியாவை சேர்ந்த ஆயுஷ்மான் குரானா (Ayushmann Khurrana) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனங்கள்
- ☞உலக வங்கியின் செயல் இயக்குனர்களில் ( Executive Director of World Bank ) ஒருவராக இந்தியாவை சேர்ந்த ராஜேஷ் குல்லர் (Rajesh Khullar) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ☞ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank (ADB)) செயல் இயக்குனர்களில் ஒருவராக சமீர் குமார் (Sameer Kumar) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ☞தேசிய நாடகப் பள்ளியின் (National School of Drama) தலைவராக பாரேஸ் ராவல் (Paresh Rawal)நியமிக்கப்பட்டுள்ளார்.
- ☞வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு பதப்படுத்துதல் தொழில் மந்திரி அமைச்சர் பொறுப்பில் இருந்து ஹர்ம்சித்ராத் கவுர் இராஜினாமா செய்துள்ளார்.
முக்கிய தினங்கள்
- ☞சர்வதேச கடலோர தூய்மைபடுத்தல் தினம் (International Coastal Clean-Up Day) - செப்டம்பர் 19
- ☞சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம் (International Day for Prevention of the Ozone Layer) - செப்டம்பர் 16
- ☞சர்வதேச சம ஊதிய தினம் (International Equal Pay Day) - செப்டம்பர் 18
- ☞உலக மூங்கில் தினம் (World Bamboo Day) - செப்டம்பர் 18
- கூ.த. : உலக மூங்கில் நிறுவனத்தின் தலைமையிடம் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ளது.
- ☞உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் (World Patient Safety Day) - செப்டம்பர் 17 | மையக்கருத்து 2020 - சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு : நோயாளிகளின் பாதுகாப்பிற்கான முன்னுரிமை (Health Worker Safety: A Priority for Patient Safety)
- ☞தேசிய பொறியாளர்கள் தினம் (Engineers Day) - செப்டம்பர் 15 ((இந்தியாவின் புகழ் பெற்ற அணைக்கட்டு பொறியாளர் MVM விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்ததினத்தில் அனுசரிக்கப்படுகிறது.)
- ☞உலக ஓஷோன் தினம் (World Ozone Day) - செப்டம்பர் 16
- ☞சர்வதேச மக்களாட்சி தினம் (International Day of Democracy) - செப்டம்பர் 15
- ☞இந்தி மொழி தினம் (Hindi Diwas) - செப்டம்பர் 14
- ☞உலக முதலுதவி தினம் (World First Aid Day) - செப்டம்பர் 12
- ☞ஐக்கிய நாடுகளவையின் சர்வதேச தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு தினம் (International Day of South-South Cooperation) - செப்டம்பர் 12
- ☞தேசிய காடுகளில் மரணமுற்ற தியாகிகள் தினம் (National Forest Martyr day) - செப்டம்பர் 11
விளையாட்டு
- ☞"யு.எஸ் ஓபன் 2020" (US Open 2020) ல் வெற்றி பெற்றோர் விவரம்:
- ஆண்கள் ஒற்றையர் - டொமினிக் தீம் (Dominic Thiem), ஆஸ்திரியா
- பெண்கள் ஒற்றையர் - நவோமி ஒசாகா (Naomi Osaka ), ஜப்பான்
- ஆண்கள் இரட்டையர் -மேட் பவிக் (Pavic), குரோஷியா & புரோனா சோரஸ்(Bruno Soares), பிரேசில்
- பெண்கள் இரட்டையர் - லாரா சிக்மண்ட் (Laura Siegemund ) , ஜெர்மனி & வேரா ஸ்வோனாரிவா (Vera Zvonareva), ரஷியா
புத்தகங்கள்
- ☞“A Promised Land”என்ற பெயரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் நினைவுக் குறிப்புகளின் முதல் தொகுதி நவம்பர் 2020 ல் வெளியிடப்படவுள்ளது.
- ☞“Azadi: Freedom. Fascism. Fiction”என்ற பெயரில் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
- ☞“An Ode to Venus”என்ற தலைப்பில் வெள்ளி கோளை பற்றிய பாடலை மடகாஸ்கர் மற்றும் காமரோஸ் நாடுகளுக்கான இந்தியாவின் தூதர் அபய் குமார் ( Abhay Kumar ) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ☞‘End of an Era, India Exits Tibet’என்ற புத்தகத்தின் ஆசிரியர் - கிளாடி ஆர்பி (Claude Arpi)
- ☞பிரதமர் மோடி அவர்கள் ‘அன்னை தெய்வத்துக்கு’ என்ற பெயரில் குஜராத்தி மொழியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு, ‘தாய்க்கு கடிதங்கள்’என்ற பெயரில் பாவனா சோமாயா என்ற எழுத்தாளரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
- ☞”WD 1856 b”என்ற பெயரில் புதிய கோளை நாசாவின் (NASA) ‘டெஸ்’ (Transiting Exoplanet Survey Satellite (TESS)) விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கோளானது, ‘WD 1856+534’ எனப்படும் குறுங்கோளைச் சுற்றி வருகிறது.
- ☞‘லேப்-இன்-கார்ட்ரிஜ்’என்று பெயரிடப்பட்டுள்ள 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனாவை பரிசோதித்து அறியும் கருவியை இங்கிலாந்தைச் சேர்ந்த டிஎன்ஏநட்ஜ்’ என்ற நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது.
- ☞10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறிய உயிரினத்தின் உயிரணு படிவம் மியான்மர் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்படாத இனத்தினை சேர்ந்த அந்த உயிரினத்திற்கு மியான்மர்சைப்ரிஸ் ஹுய் என பெயரிடப்பட்டு உள்ளது. இது தற்கால ஆஸ்டிராகாட் என்ற உயிரினம் போன்ற உருவத்தினை ஒத்துள்ளது.
- ☞வெள்ளி கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு :சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் வெப்பநிலை 900 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகத்தைப் பற்றிய ஆய்வில் வெள்ளி கிரகத்தின் அமில மேகங்களில் இருந்து பாஸ்பீன் வாயுவின் தடயத்தை ஜானே கிரேவ்ஸ் என்ற இங்கிலாந்து விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
- கரிமப் பொருட்களின் முறிவிலிருந்து பூமியில் பெரும்பாலும் ஏற்படும் எரியக்கூடிய வாயுவான பாஸ்பீனின் தடயங்களை வீனஸ் ஜிரகத்தின்மேற்பரப்பில் இருந்து 60 கிலோமீட்டர் (45 மைல்) தொலைவில் இருந்ததைஅவர்கள் கண்டறிந்தனர்.
- நிறமற்றதும், எளிதில் தீப்பிடிக்கக் கூடியதும், துர்நாற்றம் அடிக்கக் கூடிய இந்த வாயு, ஒரு மடங்கு பாஸ்பரஸ் மற்றும் 3 மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயுவாகும்.
- எனவே வெள்ளி கிரகத்தில் இந்த வாயு இருப்பதன் மூலம் ஹைட்ரஜன் இருப்பதும் உறுதியாகி உள்ளது. மனிதர்கள் உயிர் வாழ ஹைட்ரஜன் வாயுவும் தேவை என்பதால உறுதியாக வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழ்நிலை பிரகாசமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Please post daily current affairs on daily
பதிலளிநீக்குthank you your upload
பதிலளிநீக்கு