தமிழ்நாடு
👉அனைத்து துப்புரவுப் பணியாளா்களையும், தூய்மைப் பணியாளா் என அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, துப்புரவாளா்கள், காவலா்கள்- துப்புரவாளா்கள், துணைத் துப்புரவாளா்கள், நீா்கொணா்பவா் - துப்புரவாளா் ஆகிய அனைவருமே தூய்மைப் பணியாளா்களாக அழைக்கப்படுவா்.
👉தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என இந்திய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
👉திருப்பத்தூர் அருகே குண்டு ரெட்டியூரில் கி.பி 751-ம் ஆண்டைச் சேர்ந்த பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
👉விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் டிசம்பர் 24ம் தேதி நடக்கிறது. விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த 1921ம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. கடந்த 1951ம் ஆண்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், நாடாளுமன்ற சட்டம் மூலம் மத்திய பல்கலைக்கழகமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டது. பிரதமர் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.
👉அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர், திரு நரேந்திர மோடி 22.12.2020 அன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நினைவாக ஒரு தபால் தலையையும் அவர் வெளியிட்டார். முஹம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி என்ற பெயரில் 1877 ஆம் ஆண்டு சர் சையது அகமது கான் என்பவரால் துவக்கப்பட்ட இக் கல்லூரி 1920 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மத்திய அரசின் பழம்பெரும் பல்கலைழகமாக இருக்கும் இது, உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் அமைந்துள்ளது. மலப்புறம்(கேரளா), முர்சிதாபாத்(மேற்கு வங்காளம்) ஆகிய நகரங்களில் கிளைகள் உள்ளன.
👉தில்லியில் உள்ள தொழிற்சாலைகள், 100 சதவீதம் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்படுத்த காற்று தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பசுமையான, உறுதியான மற்றும் பாதுகாப்பான நெடுஞ்சாலைகளை இந்தியாவில் அமைப்பதற்காக 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடனுதவி திட்டத்தில் இந்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
👉சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான புதிய கொள்கையை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ப்ரீமியம் இன்டன்ட் என்னும் பிரிவின் கீழ் கோரிக்கை வைக்கும் வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படும்.
👉உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி அருகே பல்லியா மாவட்டம், தெஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த நேஹா சிங் புகழ்பெற்ற ’மோட்சத்துக்கான மரம்’ (tree of salvation) என்ற ஓவியத்தை 675.12 சதுர அடி (62.72 சதுர மீட்டர்) நீளத்தில் வரைந்துள்ளார். முழுக்க முழுக்க இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலாவதியான மசாலா உணவுப் பொருட்களைக் கொண்டு ஓவியம் தீட்டியுள்ளார். இதற்காக கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
👉இந்திய ரிசர்வ் வங்கி 1 ஜனவரி 2021 முதல் ரூ .50,000 க்கு மேல் காசோலை பரிவர்த்தனைகளுக்கு “நேர்மறை செலுத்தும் முறை” ( Positive Pay System) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தவும் மோசடிகளை அகற்றவும் இது செய்யப்பட உள்ளது.
👉ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் R கிளஸ்டரிலிருந்து எரிவாயு உற்பத்தியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன. R கிளஸ்டர் (R cluster) என்பது ஆசியாவின் ஆழமான ஆஃப்-ஷோர் எரிவாயு துறையாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் இணைந்து உருவாக்கிய மூன்று ஆழ்கடல் எரிவாயு திட்டங்களில் இது முதலாவதாகும்.
👉‘வரசத்’ (இயற்கை வாரிசு) என்ற பெயரில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் தொடர்புடைய சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டிசம்பர் 15, 2020 அன்று தொடங்கினார். இந்த 2 மாத பிரச்சாரம் பிப்ரவரி 15, 2021 வரை தொடரும்.
👉திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால், உலகளவில் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நாடாக இந்தியா உள்ளது.
👉டிடிஎச் சேவை வழிமுறைகள் திருத்தத்துக்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் 23.12.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிடிஎச் லைசென்ஸ் 20 வருட காலத்துக்கு வழங்கப்படும். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளலாம்.
👉இந்தியா – பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே திருத்தியமைக்கப்பட்ட விமானச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
👉இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் (IISF 2020) முதல் நாளான 22-12-2020 அன்று சீனிவாச ராமானுஜனின் பிறந்ந நாளைக் குறிக்கும் வகையில் ‘ விஞ்ஞானிகா ’ என்ற தலைப்பில் சர்வதேச அறிவியல் இலக்கியத் திருவிழாவை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR-National Institute of Science Communication (CSIR)) - தேசிய அறிவியல் தகவல் மையம் ( National Information Resources (NISCAIR))), புவி அறிவியல் அமைச்சகம்(Ministry of Earth Sciences (MOES) மற்றும் விஞ்ஞான பாரதி(Vijnana Bharati (VIBHA)) ஆகியவை கூட்டாக இணைந்து காணொலிக் காட்சி மூலம் நடத்தின.
👉எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் வங்காளப் படுகையில் அமைந்துள்ள அசோகேநகர் -1 கிணற்றிலிருந்து எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கியது. இது இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் எட்டாவது இடமாகும். இந்தியாவின் மற்ற எண்ணெய் உற்பத்தி படுகைகள் மும்பை ஆஃப்ஷோர், கிருஷ்ணா-கோதாவரி நதி படுகை, காவிரி, அசாம் ஷெல்ஃப், ராஜஸ்தான், அசாம்-அரகன், கம்பே மற்றும் மடிப்பு பெல்ட் ஆகிய இடங்களில் உள்ளன.
👉கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களில் முதல் 10 இடங்களில் 77 புள்ளிகளுடன் அனில் பிரோஜியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரை அடுத்து, அதலா பிரபாகர ரெட்டி (74 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும் ராகுல் காந்தி (70 புள்ளிகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மஹுவா மொய்த்ரா( 68 புள்ளிகள்) 4 வது இடத்தையும் எல்.எஸ்.தேஜஸ்வி சூர்யா ( 67 புள்ளிகள்) 5வது இடத்தையும் ஹேமந்த் துக்காரம் கோட்சே ( 66 புள்ளிகள்) 6வது இடத்தையும் சுக்பீர் சிங் பாதல் ( 65 புள்ளிகள்) 7வது இடத்தையும் சங்கர் லால்வானி (64 புள்ளிகள்) 8 வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு தொகுதி எம்.பி டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் ( 63 புள்ளிகள்) 9வது இடத்தைப் பிடித்துள்ளார். நிதின் ஜெய்ராம் கட்கரி( 61 புள்ளிகள்) 10வது இடத்தைப் பிடித்துள்ளார். கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
👉காணொலி மூலம் நடைபெற்ற 6 வது இந்தியா-ஜப்பான் சாம்வாட் மாநாட்டின் உரையின் போது, பிரதமர் இந்தியாவில் பாரம்பரிய புத்த இலக்கியம், உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் பிரதிகள் உள்ளிட்ட வேதங்களை உள்ளடக்கிய ஒரு நூலகத்தை உருவாக்கவுள்ளதாக முன்மொழிந்துள்ளார்.
👉வாகன உமிழ்வைக் குறைப்பதற்கும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும், வாகன எரிபொருளாக 20% எத்தனால் மற்றும் பெட்ரோலின் கலவையான E20 ஐ ஏற்றுக்கொள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. எத்தனால் ஒரு உயிரி எரிபொருள், இது சோளம், கரும்பு, சணல், உருளைக்கிழங்கு போன்ற விவசாய தீவனங்களால் எஞ்சியிருக்கும் உயிரிப்பொருட்களின் பொதுவான தயாரிப்பு ஆகும்.
👉இந்தியாவின் முதல் பாலின தரவு மையத்தை(Gender Data Hub) 24 ஏக்கர் கோழிக்கோடு வளாகத்தில் பாலின பூங்காவில் நிறுவ ஐ.நா. பெண்கள்(UN Women) அமைப்பு, கேரள அரசின் பாலின பூங்காவுடன்(Gender Park) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 21 டிசம்பர் 2020 அன்று கையெழுத்திட்டுள்ளது. இந்த மையமானது, பாலின பூங்கா பாலின சமத்துவத்திற்கான தெற்காசிய மையமாக(South Asian hub) செயல்படும்.
வெளியுறவு
👉பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
👉இந்திய வம்சாவளிகளான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பைடன் வழங்கி உள்ளார். இதில், அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உலகம்
👉இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக, 'இந்தியாவின் சுவை' என்னும் பிரச்சாரம் பாங்காக்கில் செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நமது நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதியை விரிவாக்கும் நோக்கில், வாங்குவோர் விற்போர் கூட்டத்தை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நடத்தியது.
👉உலக வங்கி எளிதாக தொழில் துவக்கும் நாடுகளின் பட்டியல் 17 வது பதிப்பில் இந்தியா 63 வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய 4 நாடுகள் சமர்ப்பித்த தரவு முறைகேடுகளை சரிசெய்த பின்னர் உலக வங்கி (World Bank (WB)) புதுப்பிக்கப்பட்ட எளிதாக தொழில் துவக்கும் நாடுகளின் பட்டியலை (Ease of Doing Business) 2020 வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்கள் முறையே நியூசிலாந்து, சிங்கப்பூர், சீனா நாடுகள் பெற்றுள்ளன.
👉‘சார்ஸ்-கோவிட் - 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் அதிகம் பரவக் கூடியதாகவும், இளைஞர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் மாறுபாடு, 17 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது ஸ்பைக் புரதத்தில் உள்ள என்501ஒய் மாற்றம். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம்.
👉அமெரிக்க தேசிய பொருளாதாரக் குழுவின் துணை இயக்குநராக தமிழ்நாட்டைப் பூா்விகமாகக் கொண்ட பரத் ராமமூா்த்தியை அமெரிக்க அதிபராக தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நியமித்துள்ளாா்.
சுற்றுச்சூழல்
👉மேற்கு இந்தியப் பெருங்கடலில் நீல திமிங்கலங்களின் கூட்டம் இருப்பதற்கான ஆதாரங்களைக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கூட்டம் முதல் முறையாக கண்டுபிடிக்கப்படுகிறது.
விளையாட்டு
👉‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியாளா்கள் பயிற்சி பெறுவதற்காக கா்நாடகம், அருணாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மிஸோரம், ஒடிஸா, தெலங்கானா, நாகாலாந்து ஆகிய 8 மாநிலங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளுடனான மையங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு 22.12.2020 அன்று திறந்துவைத்தாா்.
👉கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளரான அப்துல் ஜப்பார் 22.12.2020 அன்று காலை சென்னையில் காலமானார். அகில இந்திய வானொலியில் கிரிக்கெட் வர்ணனையாளராக 1982-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து போட்டியில், இவரது தமிழ் வர்ணனையை கேட்டு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
👉2020-ஆம் ஆண்டுக்கான ஏடிபி விருதுகளுக்காக சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.
முக்கிய தினங்கள்
👉சர்வதேச மனித ஒற்றுமை நாள் (International Human Solidarity Day) - டிசம்பர் 20
👉தேசிய கணித நாள் (National Mathematics Day or Math Day) - டிசம்பர் 22 (கணித மேதை ராமானுஜரின் பிறந்த தினத்தில் (22-12-1887) அனுசரிக்கப்படுகிறது.)
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.