-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 19 & 20 January 2021

TNPSC Current Affairs 19 - 20 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா 19-1-2021 அன்று காலமானார். மார்ச் 11, 1927-ல் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது ஒன்றே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட டாக்டர் சாந்தாவுக்கு 1986ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை அளித்து கவுரவித்தது. 1997ஆம் ஆண்டு கேன்சர் கட்டுப்படுத்துவதில் முன்னோடியான இவருக்கு ஐஏஆர்சி விருது கிடைத்தது. 2002-ம் ஆண்டு ப்ரஸ்ஸலில் மவ்லானா விருதும், 2005-ம் ஆண்டு மருத்துவத்துறையில் சிறப்பான பணிக்காக உயரிய விருதான ரமோன் மகசேசே விருதும் அளிக்கப்பட்டது.2006-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு தமிழக அரசால் அவ்வையார் விருது அளிக்கப்பட்டது.

இந்தியா

இந்தியாவில் இருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு 20-1-2021 முதல் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு நல உதவித்திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பாக ஆயுஷ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : முன்னதாக, மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை அமைச்சராக (தனிபொறுப்பு) செயல்பட்டு வந்தர் ஸ்ரீபாத் நாயக் கர்நாடக மாநிலத்தில் வாகன விபத்தில் விபத்துக்குள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளதால் இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவப் படையினருக்கான ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 23-1-2021 அன்று அஸ்ஸாமில் தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஏபி பிஎம்-ஜேஏஒய் எனப்படும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். 10.74 கோடி ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு (சுமாா் 53 கோடி பயனாளிகள்) அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும் அரசு சாா்பில் நிதியுதவி வழங்கும் மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் பணமில்லா, காகிதமில்லாத பரிவா்த்தனைக்கு இத்திட்டம் அடித்தளமிட்டது.

இந்நிலையில் மத்திய துணை ராணுவப் படையின் பல்வேறு பிரிவுகளான மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை (ஐடிபிபி), சஷத்ர சீபாபால் (எஸ்எஸ்பி), அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையைச் சோ்ந்த வீரா்களையும், இந்தத் திட்டத்தின்கீழ் ஜன. 23-ஆம் தேதி முதல் இணைக்கப்பட உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் குப்கா் கூட்டமைப்பில் இருந்து மக்கள் மாநாட்டுக் கட்சி வெளியேறியதாக அந்தக் கட்சியின் தலைவா் சஜத் லோன் அறிவித்துள்ளார் .

” குப்கா் கூட்டமைப்பு பற்றி...” :

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதனை திரும்பப் பெறும் நோக்கில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அங்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்து குப்கா் கூட்டமைப்பை உருவாக்கின.

‘டெசர்ட் நைட்-21’ (பாலைவன வீரன்) (Exercise Desert Knight-21) என்ற பெயரில், இந்திய விமானப்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண் படை ஆகியவை இணைந்து ‘ கூட்டு விமானப் பயிற்சியை, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 20-24 ஜனவரி 2021 தினங்களில் மேற்கொள்கின்றன. இந்த ஒத்திகையில், பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய விமானப்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், ஐஎல்-78, அவாக்ஸ் மற்றும் ஏஇடபிள்யூ&சி விமானங்கள் பங்கேற்கின்றன.

குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார் . முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பின், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கும் 2-வது பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.

☞ உலகில் வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாக , லண்டனின் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஆய்வு நிறுவனமான லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் மற்றும் டீல்ரூம்.கோ ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் லண்டன், முனிச், பெர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவை உள்ளன. இந்தியாவின் நிதி மையமாக விளங்கும் மும்பை ஆறாம் இடத்தில் உள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் (Committee on Farm Laws appointed by Supreme Court) முதல் கூட்டம் 19-1-2021 அன்று புது தில்லியில் நடைபெற்றது . வேளாண் விலை குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் அசோக் குலாடி, ஷெட்காரி சங்காதனா அமைப்பின் தலைவர் திரு அனில் கன்வாத், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் தெற்காசிய இயக்குநர் டாக்டர் பிரமோத் ஜோஷி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள், விவசாயிகளின் வாரியங்கள், சங்கங்கள், இதர பங்குதாரர்களுடன் இரண்டு மாத காலத்திற்கு கலந்தாலோசித்த பிறகு அளிக்கவுள்ள பரிந்துரைகளைத் தயாரிப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

தேசிய தொடக்க நிறுவனங்களின் ஆலோசனை குழுவுக்கு (National Startup Advisory Council) அரசு அதிகாரிகள் அல்லாத 28 உறுப்பினர்களை மத்திய அரசு 19-1-2021 அன்று நியமித்துள்ளது . இந்தியாவில் வெற்றிகரமான தொடக்க நிறுவனங்களை உருவாக்கிய நிறுவனர்கள், புதிய தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய நபர்கள், தொடக்க நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள், தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பை சேர்ந்த இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இதில் எது முன்போ அது வரை இருக்கும்.

கூ.தக . : நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஏற்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கவும், இந்த தேசிய தொடக்க நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவை, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) ) 2020ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி அமைத்தது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வருடத்திற்கு கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது . நிகழ்ச்சிகள் குறித்து முடிவெடுப்பதற்கும், கொண்டாட்டங்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் முதல் பெண் போர் விமானி எனும் பெருமையை பவானா காந்த் (Bhawana Kanth) பெறவுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் பெண் போர் விமானிகளில் இவரும் ஒருவர். இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட மற்ற போர் விமானிகள் அவனி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோராவர்.

”ரக்‌ஷிதா” (“Rakshita”) என்ற பெயரில் பைக் ஆம்புலன்ஸ் ஒன்றை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research Development Organisation (DRDO)) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force (CRPF)) ஆகியவை உருவாக்கியுள்ளன. அவசரகால அல்லது போர் காயத்தின் போது சிஆர்பிஎஃப் பணியாளர்களின் வெளியேற்றத் தேவைகளில் பைக் ஆம்புலன்ஸ் உதவிபுரியும். டி.ஆர்.டி.ஓவின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் அண்ட் அலீஸ் சயின்ஸ் (INMAS (Institute of Nuclear and Allies Science)) நிறுவனம் இந்த பைக் ஆம்புலன்ஸை வடிவமைத்துள்ளது.

இந்தியாவின் முதல் விமான டாக்ஸி சேவை சண்டிகரில் இருந்து ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்ட ஹிசார் விமான நிலையத்திற்கு, இந்திய அரசின் 'உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்' (பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ்) (Regional Connectivity Scheme – Ude Desh Ka Aam Nagrik (RCS-UDAN)) 14-1-2021 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

2021 ஆம் ஆண்டின் இந்திய குடியரசு தின விழாவில், லத்தீன் அமெரிக்காவின் சிறியநாடான சுரிநாம் அதிபரும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரிகா பெர்சாத் சந்தோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்தியாவுக்கும் சுரிநாமுக்கும் இடையே வரலாற்று, கலாச்சார ரீதியாக தொடர்புகள் உண்டு. சுரிநாமின் மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் இந்தியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். அவர்கள் டாக்டர்கள், இன்ஜினியர்கள், நர்சுகளாக பணியாற்றி வருகின்றனர். 1873-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியின்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதன்முதலில் இந்தியர்கள் சுரிநாமுக்கு கப்பல்மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 1916-ம் ஆண்டு வரை 64 முறைகப்பல் மூலம் 34,000 இந்தியர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுரிநாமில் வசிக்கும் இந்தியர்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் இந்திய நாட்டுப்புற இசையை பாடி வருவதோடு போஜ்புரி, அவாதி, மைதிலி மற்றும் மகாஹி மொழிகளைப் பேசி வருகின்றனர்.

சுரிநாமில் வசிக்கும் இந்தியர்கள் பேசும் மொழிகளில் ‘மைதிலி’ மொழியும் ஒன்று. நேபாளத்தை ஒட்டி அமைந்துள்ள பிஹாரின் வடக்குப் பகுதியில் ‘மைதிலி’ மொழியை குறைந்த அளவிலான மக்கள் பேசி வருகின்றனர். நேபாளத்தில் உள்ள மிதிலாபுரி என்று வழங்கப்பட்ட மிதிலையில்தான் சீதாதேவி பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மிதிலா தேசம் என்று வழங்கப்பட்ட அங்கிருந்துதான் மைதிலி மொழி உருவானது.

இந்தியா-சீன எல்லையில் அமைந்துள்ள அருணாசல பிரதேச மாநிலத்துக்குள் புகுந்து புதிய கிராமத்தையே சீனா உருவாக்கியுள்ளது , செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.இந்தியா-சீனா எல்லைப் பகுதியிலிருந்து சுமாா் 4.5 கி.மீ. தொலைவில் அப்பா் சுபான்சிரி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.அந்தப் பகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் வீடுகள் எதுவும் காணப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சுமாா் 101 வீடுகள் காணப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பின் நிா்வாக வாரியத்தின் (WHO Executive Board) 148-வது அமா்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினாா்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே அறிவுசார் சொத்துரிமையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தை 14-1-2021 அன்று நடைபெற்றது.

சர்வதேச நிகழ்வுகள்

உலகின் முதல் கொரோனா நோயாளியான சீனாவைச் சேர்ந்த ஹுவாங் யான்லிங் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

‘சினோபார்ம்’ என்ற பெயரில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி யை சீனா கண்டுபிடித்துள்ளது.

பொருளாதாரம்

உலக பொருளாதார அமைப்பு நடத்தும் டாவோஸ் செயல்திட்ட மாநாடு ( Davos Agenda Summit) 13-16 மே 2021 தினங்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமா் யோஷிஹிதே சுகா, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரான், ஜொ்மனி பிரதமா் ஏஞ்செலா மொ்க்கல், தென் கொரிய அதிபா் மூன் ஜே இன், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்

2021 முதல் 2026 ஆம் ஆண்டுகள் வரையிலான காலக்கட்டத்திற்கான இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 1 ஏப்ரல் 2021 அன்று தொடங்கவுள்ளது . அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை சர்வதேச வர்த்தகத்தில் ஒரு தலைமையாக மாற்றுவதே இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும். முந்தைய வெளியுறவு வர்த்தக கொள்கை 2015-20 தொற்றுநோய் காரணமாக 2021 மார்ச் 31 வரை ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கி முதலீட்டு நிறுவனம் (Bank Investment Company) என்ற அமைப்பை நிறுவுவதற்கான வழிமுறைகளை மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இந்த வங்கி முதலீட்டு நிறுவனம் எனும் அமைப்பானது, P.J. .நாயக் குழு (P.J. Nayak Committee) தனது ‘இந்தியாவில் வங்கிகளின் வாரியங்களின் ஆளுகை’ (‘Governance of Boards of Banks in India’) எனும் பெயரிலான அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது ஆகும்.

முக்கிய தினங்கள்

☞ முதலாவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் (National Road Safety Month) 18-1-2021 அன்று முதல் 17 பிப்ரவரி 2021 வரையில் அனுசரிக்கப்படுகிறது. இதன் மையக்கருத்து - சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு (“Sadak Suraksha- Jeevan Raksha”) என்பதாகும்.

கூ.தக. : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாவது வாரத்தை தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடித்து வருகிறது.

☞ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23-ஐ ஒவ்வொரு வருடமும் “தேசிய வலிமை தினமாக / பராக்கிரம தினமாக” (PARAKRAM DIWAS) கொண்டாட மத்திய அரசு முடுவெடுத்துள்ளதாக மத்திய கலாசார துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் அறிவித்துள்ளார்.

24 வது தேசிய இளைஞர் விழா (National Youth Festival) 2021, 12-16 ஜனவரி 2021 தினங்களில் நடைபெற்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ரத்த குழாய்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் போக்கை முறைப்படுத்தும் ஸ்டென்ட் (indigenous flow diverter stent) , இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி வென்ற நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த டெஸ்ட் அணியில் மட்டும் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன், அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று காண்பித்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து, முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நியூஸிலாந்து அணி 420 புள்ளிகளுடன், 70 சதவீத வெற்றிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2 சதவீத வெற்றிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. 5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி 144 புள்ளிகளுடன், 40 சதவீத வெற்றிகளுடன் உள்ளது.

கூ.தக. : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.