-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 29-31 January 2021

TNPSC Current Affairs 29-31 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

தமிழக அரசின் 47-ஆவது புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தில்லியில் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

தமிழக அரசின் ஆலோசகராக முன்னாள் தலைமைச் செயலர் க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக கோயில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது . இங்கு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஆளுயர வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவா (94), 28-1-2021 அன்று கொழும்பில் காலமானார். இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜீவா, எழுத்துலகின் மீது கொண்ட ஆா்வத்தால் ‘மல்லிகை’ என்னும் இதழைத் தொடங்கினார். ‘தண்ணீரும் கண்ணீரும்’, ‘பாதுகை’, ‘சாலையின் திருப்பம்‘, ‘வாழ்வின் தரிசனங்கள்‘, ‘டொமினிக் ஜீவா சிறுகதைகள்‘ உள்ளிட்ட சிறுகதைகளும், ‘அனுபவ முத்திரைகள்‘, ‘அச்சுத்தாளினூடாக ஓா் அனுபவ பயணம்‘, ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்‘, ‘நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்‘, ‘முப்பெரும் தலைநகரங்களில் 30 நாள்கள்‘ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார் இவற்றில் ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும். வழக்கமாக முனைவா் பட்டம் வழங்கி கெளரவப்படுத்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவருக்கு மட்டும் எம்.ஏ. பட்டம் வழங்கி சிறப்பித்தது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இ ந்தியன் ஆயில் நாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க இருக்கிறது.‘ ரூ.31,500 கோடி முதலீட்டில், ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெயை சுத்திகரிக்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படும். இது தொடா்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், அதன் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷனுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஆலை செயல்படத் தொடங்கும். ஆலை கட்டுமானப் பணிக்கான பொருள்கள், சேவைகளில் 80 சதவீதம் உள்நாட்டுப் பங்களிப்பு இருக்கும். இங்கு பிஎஸ் 6 தரத்திலான பெட்ரோல், டீசல் சுத்திகரிக்கப்படும்.

என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் ஓய்வு பெற்றது : தொடர்ந்து இயங்கும் திறன் இருந்தாலும், தரம் சார்ந்த ஆயுட் காலத்தைக் கருதி மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி கடந்த 30.09.2020 அன்றுடன் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது.

தெற்காசியாவில் முதன்முறையாக நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்த பெருமைக்குரியது என்எல்சி அனல் மின்நிலையமாகும். சோவியத் ரஷ்யாவின் தொழில்நுட்பத்தில் உருவான இந்த அனல் மின்நிலையம் கர்மவீரர் காமராஜரின் கடும் முயற்சியினால் உருவாகியதாகும். ரூ.78 கோடி மதிப்பீட்டில் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த ‘டெக்னோ ப்ரேம் எக்ஸ்போர்ட்’ என்று நிறுவனம் அனல்மின் கட்டுமானப் பணியை தொடங்கியது. 23-05-1962 அன்று 50 மெகாவாட் திறனுடன் உற்பத்தியை தொடங்கிய போது, அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனல்மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் என்எல்சி நிர்வாகம் படிப்படியாக அனல்மின் நிலையப் பணியை விரிவுப்படுத்தியதன் விளைவாக 1970-களில் 9 யூனிட்டுகளுடன் 600 மெகா வாட் மின் உற்பத்திக்கு உயர்ந்ததோடு, தான் உற்பத்தி செய்த மின்சாரத்தில் 90 சதவீதத்தை தமிழகத்திற்கே வழங்கியது.

இந்தியா

அறிவியல் வெளியீட்டில் ( scientific publication) இந்தியா உலகளவில் 3 வது இடத்தில் உள்ளது. தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation ) எனும் அமெரிக்க நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான அறிவியல் வெளியீடுகளின் தரவுகளின் அடிப்படையிலான இந்த அறிக்கையில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் பெற்றுள்ளன.

ஊழல் புலனறிவு குறியீடு 2020 (Corruption Perceptions Index) ல் இந்தியா 86 வது இடத்தைப் பெற்றுள்ளது. டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேசனல் (Transparency International) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் , ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளும். ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் உள்ளன.

இந்திய நீதி அறிக்கை 2020 ( Edition of India Justice Report 2020 ) இன் படி, 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் சிறந்த நீதி வழங்கலுக்கான முதல் ஐந்து இடங்களை முறையே மகாராஸ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் கேரளா மாநிலங்கள் பெற்றுள்ளன. சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே, திரிபுரா, சிக்கிம், கோவா, ஹிமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் ஆகியவை பெற்றுள்ளன.

மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை வைத்து கோயில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் இந்து மகாசபை சார்பில் கட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கையில் மெக்ஸிகோ 3-ஆவது இடத்துக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்த இடத்தில் இருந்த இந்தியா 4-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. ஜனவரி 2020 அடிப்படையிலான, கரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுத்துள்ள நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ நாடுகள் உள்ளன.

2021-ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 30-1-2021 அன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் முதல் கரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில் 30 ஜனவரி 2020 அன்று பதிவானது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி திரும்பிய மருத்துவ மாணவிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே 29-1-2021 அன்று குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது .

மத்திய அரசுக்கு சொந்தமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் (Scooters India Limited (SIL)) நிறுவனத்தை தொடர் நஷ்டங்களினால் மூடுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கூ.தக. : உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1972 இல் நிறுவப்பட்டது . இந்நிறுவனத்தின் மூலம் லம்பிரெட்டா(Lambretta), லம்பி(Lamby), விஜய்(Vijay), விக்ரம் (Vikram) & லாம்ப்ரோ ( Lambro) போன்ற ஸ்கூட்டர்களை தயாரிக்கப்பட்டன.

ஆசியா-பசிபிக் தனிநபருக்கான சுகாதார குறியீட்டில் (Asia-Pacific Personalised Health Index) இந்தியா 10 வது இடத்தில் உள்ளது. Economist Intelligence Unit (EIU) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

கூ.தக. : இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

திரையரங்குகளில் 1 பிப்ரவரி 2021 முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் முதல் பனிக் குடில் உணவகம் காஷ்மீரின் குல்மார்க் நகரில் உள்ள கோலஹோய் ஸ்கை ரிசார்ட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய புத்தர் சிலை (100 அடி உயரம்) புத்தகயாவில் நிறுவப்படவுள்ளது.. ‘புத்தா இன்டெர்நேஷனல் வெல்பேர் மிஷன்’ என்ற அமைப்பு இதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. பிஹார் மாநிலம் புத்தகயாவில் உள்ள ஒரு கோயிலில் அடுத்த ஆண்டு புத்த பூர்ணிமா நாளில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட உள்ளது. கொல்கத்தாவின் பாராநகர் பகுதியில் கோஷ்பாரா என்றஇடத்தில் உள்ள ஒரு மைதானத்தில் மின்ட்டு பால் என்ற கலைஞர் இதனை உருவாக்கி வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி சீர்திருத்தங்களை (Urban Local Bodies reforms) வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 5வது மாநிலமாக ராஜஸ்தான் இணைந்துள்ளது . மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, கொண்டு வந்த நகர்ப்புற உள்ளாட்சி சீர்திருத்தங்களை ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், தெலங்கானா ஆகியவை நிறைவேற்றியுள்ளன.

மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கு சிறப்பான பொது சுகாதார சேவைகளையும் வழங்குவதற்காக இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பொருளாதார ரீதியாக புத்துயிர் பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், நல்ல உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும்.

'பிரபுத்த பாரதா' (‘Prabuddha Bharata’ ) வின் 125 வது ஆண்டுவிழா : 1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான 'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் 31 ஜனவரி அன்று அனுசரிக்கப்படுகிறது.

'பிரபுத்த பாரதா' பற்றி…..

இந்தியாவின் பண்டைய ஆன்மிக ஞானம் குறித்த செய்திகளை பரப்புவதற்கான முக்கிய ஊடகமாக 'பிரபுத்த பாரதா' திகழ்கிறது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை, இரண்டு வருடங்கள் கழித்து ஆல்மோராவில் இருந்து வெளியிடப்பட்டது. 1989 ஏப்ரலில் இருந்து அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளியாகி வருகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பால கங்காதர திலகர், சகோதரி நிவேதிதா, குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் 'பிரபுத்த பாரதா'-வுக்கு பங்களித்துள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் ”ஸ்டார்ஸ்” எனப்படும், கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துதல் (Strengthening Teaching-Learning and Results for States (STARS)) திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி உதவிக்கான ஒப்பந்தம், இந்திய கல்வி அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs (DEA)) மற்றும் உலக வங்கி (World Bank ) ஆகியவற்றுடன் 29-1-2021 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, உலக வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 3700 கோடி) கடனுதவி வழங்கும்.

பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (Department of School Education and Literacy (DoSEL)) கீழ் ஒரு புதிய மைய அரசின் நிதியுதவி திட்டமாக STARS திட்டம் செயல்படுத்தப்படும். முன்னதாக மத்திய அமைச்சரவை 2020 அக்டோபர் 14 ஆம் தேதி இந்த ஸ்டார்ஸ் திட்டத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கியது.

வெளிநாட்டு உறவுகள்

ரஷ்யாவிலிருந்து 21 மிக்-29 ( MiG-29(Mikoyan-Gurevich)) போர் விமானங்கள் மற்றும் 12சுகோய்-30 (Sukhoi(Su)-30 ) எம்.கே.ஐ (MKI(Modernizirovannyi, Kommercheskiy, Indiski)) விமானங்களை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை மீட்டெடுப்பதற்காக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 28-1-2021 அன்று முன்மொழிந்த 8 அம்ச திட்டத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இரு நாட்டு எல்லைகள் தொடா்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு (எல்ஏசி) மதிப்பளிப்பது, பரஸ்பர நலன்களுக்கு மரியாதை அளிப்பது, எல்லையில் நிலவும் சூழலை ஒருதலைபட்சமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது உள்ளிட்டவை அத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

’இந்திய-பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆண்டு 2021-2022’ (Indo-French Year of the Environment over the period 2021-2022) ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிரான்சு நாட்டின் சூழலியல் மாற்றம் அமைச்சர் பார்பரா பொம்பிலி (Barbara Pompili)ஆகியோர் இணைந்து 28-1-2021 அன்று தொடங்கி வைத்தனர். நீடித்த வளர்ச்சியில் இந்திய-பிரெஞ்சு கூட்டை வலுப்படுத்துவதும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறன்மிகு செயல்களை அதிகப்படுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார் .முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

உலகின் மிகப்பெரிய ‘பருவநிலை மாற்ற கணக்கெடுப்பின்’ முடிவுகளை ‘மக்களின் பருவநிலை அறிக்கை’ (‘People’s Climate Report’) என்ற பெயரில் ஐக்கிய நாடுகளவை வெளியிட்டுள்ளது. 50 நாடுகளின் மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையை ஐ.நா. வளர்ச்சி திட்டம் (UNDP - United Nations Development Programme)மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய அமெரிக்க குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 1,19,858 டாலராக (ரூ.87 லட்சம்) உள்ளது என ஆசிய பசிபிக் அமெரிக்க சமூக மேம்பாட்டுக்கான கூட்டணியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய அதிபரும் மைய வலதுசாரியுமான மார்செலோ ரெபெலோ டி சோசா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள டாவிஸ் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பூங்காவில் உள்ள காந்தி சிலை 30-1-2021 அன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது .

பாகிஸ்தானில் சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர் என்ற சிவன் கோவில் , புனரமைப்புக்கு பின் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தினராக இந்துக்கள் உள்ளனர். அரசு புள்ளிவிவரத்தின்படி அங்கு 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான 55 வயதான பிரமிளா ஜெயபாலும், கொரோனா வைரஸ் சிக்கல் தீர்வு குழுவில் 47 வயதாகும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2021 உலக பொருளாதார மன்றத்தின் ( World Economic Forum ) 51 வது பதிப்பு ‘தி டாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2021’ (The Davos Agenda 2021) என்ற பெயரில் 25-29 ஜனவரி 2021 தினங்களில் ‘நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு முக்கியமான ஆண்டு’ (‘A Crucial Year to Rebuild Trust) என்ற மையக்கருத்தில் மெய்நிகர் வாயிலாக நடந்தது.

பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 9.6% (- 9.6%) எதிர்மறை வளர்ச்சியையும் 2021 ஆம் ஆண்டில் 7.3% நேர்மறை வளர்ச்சியையும் எட்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள்துறை (United Nations Department of Economic and Social Affairs (UN-DESA)), தனது, “உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021”(World Economic Situation and Prospects 2021) என்ற அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2019-2020 ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) 29-1-2021 அன்று வெளியிட்டது, அதன்படி, 2019-2020 ஆம் நிதியாண்டில், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 4% ஆக இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது . இந்த திருத்தப்பட்ட மதிப்பீடானது மே 2020 ல் கணக்கிடப்பட்ட 4.2% என்பதை விட குறைவானதாகும்.

2020-21ம் ஆண்டு ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் (நன்றி: PIB)

2020-21ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 29-1-2021 அன்று தாக்கல் செய்தார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கை கொவிட்-19 முன்கள பணியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

2020-21ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

• இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதமாக குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, முதலாவது காலாண்டில் 23.9 சதவீதமாக உயர்ந்தது. இது ஆங்கில எழுத்து ‘வி’ வடிவிலான மீட்சியாகும்.

2020-21ல் பொருளாதார நிலை: ஒரு பார்வை

• கொவிட்-19 பெருந்தொற்று, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. உலகளாவிய நிதி நெருக்கடியில் இது மிக மோசமானது. சர்வதேச நிதியத்தின் 2021ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, 2020ம் ஆண்டில் உலக பொருளாதார வீழ்ச்சியின் அளவு 3.5 சதவீதம்.

• தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.7 சதவீதமாக வளர்ச்சியடையும். 2021ம் நிதியாண்டின் முதலாவது காலாண்டை விட, இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 23.9 சதவீதமாக இருக்கும்.

• இந்தியாவின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021-22ம் நிதியாண்டில் 11.0 சதவீதமாக இருக்கும். பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.4 சதவீதமாக வளர்ச்சியடையும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இது மிக அதிகளவிலான வளர்ச்சி:

•2020-21ம் நிதியாண்டின் 2வது காலாண்டில், அரசின் நுகர்வு காரணமாக பொருளாதார வளர்ச்சி 17 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

•2021ம் நிதியாண்டில் ஏற்றுமதி 5.8 சதவீதம் குறையும் எனவும், இறக்குமதி 11.3 சதவீதம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

• 2021ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு கணக்கில் 2 சதவீதம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

• கொவிட்-19 தொற்று ஏற்படுத்திய பாதிப்பை, வேளாண்துறையின் அதிக உற்பத்தி சரிசெய்யவுள்ளதால், 2021ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக இருக்கும்.

• 2021ம் நிதியாண்டில், தொழில்துறை மற்றும் சேவைகள் துறை வளர்ச்சி முறையே 9.6 சதவீதம் மற்றும் 8.8 சதவீதம் குறையும் என மதிப்பிடப்படுகிறது.

• அன்னிய நேரடி முதலீடு 2020ம் ஆண்டு நவம்பரில் மிக அதிக அளவாக 9.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020ம் ஆண்டில் அன்னிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்த ஒரே நாடு இந்தியா.

• வலுவான சேவைகள் ஏற்றுமதி மற்றும் தேவை குறைவு ஆகியவை இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் அதிக வீழ்ச்சியை ஏற்படுத்தின. வர்த்தக இறக்குமதி 39.7 சதவீதம் குறைந்தது. வர்த்தக ஏற்றுமதியும் 21.2 சதவீதம் குறைந்தது.

• அன்னிய செலாவணி கையிருப்பு 2020 டிசம்பரில், 18 மாதங்கள் இறக்குமதிக்கு நிகராக அதிகரித்தது.

• 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும் போது, 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு கடன், செப்டம்பர் இறுதியில் 21.6 சதவீதமாக அதிகரித்தது.

• இந்தியாவில், கடனுக்கான வட்டி வீதம், வளர்ச்சி வீதத்தை விட குறைவாக உள்ளது. இந்தியாவில் எதிர்மறையான வட்டிவீத வளர்ச்சி மாறுபாடு, குறைவான வட்டி வீதத்தின் காரணமாக அல்ல, அதிக வளர்ச்சி வீதம் காரணமானது. வளர்ச்சி வீதம் அதிகமுள்ள நாடுகளில் கடன் நிலையானதாக உள்ளது. இது போன்ற நிலை, குறைந்த வளர்ச்சி வீதம் உள்ள நாடுகளில் காணப்படவில்லை.

• முன்னேறிய நாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் தனிநபர் வருமானம் (வளர்ச்சி) மற்றும் சமூகப் பொருளாதாரக் குறியீடுகளுக்கு இடையில் ஒரே மாதிரியான தொடர்பு இருக்கிறது.

• பொருளாதார வளர்ச்சியானது சமத்துவமின்மை என்பதைவிட, வறுமை ஒழிப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

• சமத்துவமின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தேசிய சுகாதார லட்சியத் திட்டம் (என்.எச்.எம்.) முக்கிய பங்காற்றியுள்ளது. ஏழைப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முந்தைய / பிரசவத்துக்குப் பிந்தைய கவனிப்பு மற்றும் மருத்துவ மையங்களில் பிரசவம் பார்க்கும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.

• சுகாதாரத்துக்கான செலவு ஜிடிபியில் 1 சதவீதத்தில் இருந்து 2.5-3 சதவீதம் வரை ஒதுக்குவதால், ஒட்டுமொத்த சுகாதாரம் சார்ந்த செயல்பாடுகளுக்கு கையில் இருந்து செலவழிக்கும் தொகை 65 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறையும்.

• 2007-ல் உலக புதுமை சிந்தனை படைப்புக் குறியீடு தொடங்கப்பட்டதில் இருந்து 2020-ல் முதன்முறையாக, புதுமை சிந்தனை படைப்பு பட்டியலில் முதல் 50 நாடுகளின் பட்டியலில் (48வது இடத்தை) இந்தியா இடம் பிடித்துள்ளது. மத்திய மற்றும் தெற்காசியாவில் முதலிடத்தையும், கீழ் நடுத்தர வருவாய் பொருளாதார நாடுகளில் மூன்றாவது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது

• முதல் 10 பொருளாதார நாடுகளுடன் புதுமை சிந்தனை படைப்பில் போட்டியிட வேண்டும் என்பது இந்தியாவின் உயர்விருப்ப நோக்கமாகும்.

• நாட்டில் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் இந்தியாவில் வாழ்பவர்களின் பங்கு இப்போதைய 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும். முதல் 10 பொருளாதார நாடுகளில் இது 62 சதவீதமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாக இருக்கிறது.

• மேம்படுத்தப்பட்ட சுகாதாரக் காப்பீட்டு வரம்பு: பிகார், அசாம் மற்றும் சிக்கிமில் 2015-16 காலத்தைவிட 2019-20 காலத்தில் இத் திட்டத்தில் இணைந்த குடும்பங்களின் அளவு 89 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் மேற்குவங்கத்தில் இது 12 சதவீதம் குறைந்துள்ளது

• சிசு மரண விகிதம் குறைவு: 2015-16 முதல் 2019-20 வரையிலான காலத்தில் மேற்குவங்கத்தில் சிசு மரண விகிதம் 20 சதவீதம் குறைந்துள்ளது, அருகில் உள்ள 3 மாநிலங்களில் 28 சதவீதம் குறைந்துள்ளது

• 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மரணம் குறைவு: 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மரணம் மேற்குவங்கத்தில் 20 சதவீதம் குறைந்துள்ளது, அருகில் உள்ள மாநிலங்களில் 27 சதவீதம் குறைந்துள்ளது

• கருத்தடை சாதனங்கள் வசதி, பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் மாத்திரைகள் பயன்பாடு அருகில் உள்ள மாநிலங்களில் முறையே 36, 22 மற்றும் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்குவங்கத்தில் இதில் ஏற்பட்டுள்ள மாற்றம், கணக்கில் கொள்ளத்தக்க அளவுக்கு இல்லை

• அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்புக்கு இடையில் கால இடைவெளியை பராமரிப்பது தொடர்பான விஷயத்தில் மேற்குவங்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. அருகில் உள்ள மாநிலங்களில் இது 37 சதவீதம் குறைந்துள்ளது

• 2021 ஜனவரி 08 ஆம் தேதி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு முன் எப்போதும் இல்லாத உச்சமாக 586 .1 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டது 18 மாதங்களுக்கான இறக்குமதிகள் மதிப்புக்கு இணையாக அது அமைந்தது.

• 2019-20 நிதியாண்டின் 4வது காலாண்டில் இருந்து உபரி BoP எட்டும் அளவுக்கு துடிப்பான முதலீடு ஈர்ப்புடன், நடப்பு கணக்கு மிகைநிலையையும் இந்தியா எட்டியுள்ளது.

- 2020 ஏப்ரல்-அக்டோபரில் செய்யப்பட்ட $27.5 பில்லியன் நிகர அந்நிய நேரடி முதலீடு: 2019-20 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களோடு ஒப்பிடும் போது 14.8% அதிகம்

- 2020 ஏப்ரல்-அக்டோபரில் செய்யப்பட்ட $28.5 பில்லியன் நிகர சந்தை நேரடி முதலீடு: கடந்த வருடத்தின் இதே காலத்தில் $12.3 பில்லியனாக இது இருந்தது

* 2021 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், பொருட்களின் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் பயண சேவைகள் குறைந்ததன் காரணமாக:

- நடப்பு ரசீதுகளை (15.1%) விட நடப்பு கட்டணங்கள் (30.8% ஆக) வெகுவாக குறைந்தன

- நடப்பு கணக்கு உபரித்தொகை $34.7 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1%)

* 17 வருடங்களுக்கு பிறகு வருடாந்திர நடப்பு கணக்கு உபரித் தொகையோடு இந்தியா நிறைவு செய்கிறது

* 2020 ஏப்ரல்-டிசம்பரில் இந்தியாவின் பொருட்கள் வர்த்தகம் $57.5 மில்லியனாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலத்தில் இது $125.9 பில்லியனாக இருந்தது

* 2020 ஏப்ரல்-டிசம்பரில், பொருட்கள் ஏற்றுமதி மதிப்பான $200.8 பில்லியன், 2019 ஏப்ரல்-டிசம்பரின் $238.3 பில்லியனோடு ஒப்பிடும் போது 15.7% குறைவாகும்:

* 2020 ஏப்ரல்-டிசம்பரில், பொருட்கள் இறக்குமதி மதிப்பான $258.3 பில்லியன், 2019 ஏப்ரல்-டிசம்பரின் $364.2 பில்லியனோடு ஒப்பிடும் போது 29.1% குறைவாகும்:

* 2019 ஏப்ரல்-செப்டம்பரின் நிகர சேவை ரசீதுகளின் மதிப்பான $40.5 பில்லியனோடு ஒப்பிடும் போது, 2019 ஏப்ரல்-செப்டம்பரின் நிகர சேவை ரசீதுகளின் மதிப்பான $41.7 பில்லியன் நிலைபெற்றிருந்தது

* சேவைகள் துறையின் உறுதி மென்பொருள் சேவைகளால் வலுப்பெற்றது. மொத்த சேவை ஏற்றுமதிகளில் 49 சதவீதத்திற்கு மென்பொருள் சேவைகள் காரணமாக இருந்தன

* 2020 செப்டம்பர் இறுதியில், இந்தியாவின் வெளிப்புற கடன் $556.2 பில்லியனாக இருந்தது. 2020 மார்ச் இறுதியுடன் ஒப்பிடும் போது, இது $2.0 பில்லியன் (0.4%) குறைவாகும்.

- 2020 செப்டம்பர் இறுதியில் கடன் சேவை விகிதம் (அசல் திரும்ப செலுத்துதல் மற்றும் வட்டி கட்டணத்துடன் சேர்த்து) 9.7%-க்கு அதிகரித்தது. 2020 மார்ச் இறுதியில் இது 6.5 சதவீதமாக இருந்தது

ரூபாய் வளர்ச்சி/வீழ்ச்சி

- 6-நாணய NEER (பெயரளவிலான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி (வர்த்தகம் சார்ந்த அளவுகள்), 2020 மார்ச்சுடன் ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு 4.1% குறைந்தது; REER (உண்மையான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி 2.9% உயர்ந்தது

- 36-நாணய NEER (பெயரளவிலான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி (வர்த்தகம் சார்ந்த அளவுகள்), 2020 மார்ச்சுடன் ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு 2.9% குறைந்தது; REER (உண்மையான செலாவணி மதிப்பு) விகிதத்தின் படி 2.2% உயர்ந்தது

* அந்நிய செலாவணி சந்தைகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் இடையீடுகள் நிதி நிலைத்தன்மை மற்றும் ஒழுங்கை உறுதி செய்ததோடு, ரூபாயின் நிலையற்றத்தன்மை மற்றும் ஒருபக்க வளர்ச்சியை கட்டுப்படுத்தியது

2019 ஜூன்-டிசம்பரின் (-)0.3% முதல் 7.6% வரை ஒப்பிடும் போது, 2020 ஜூன்-டிசம்பரில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் 3.2% முதல் 11% ஆக பணவீக்கம் இருந்தது.

* 'உலக சூரியசக்தி வங்கி' மற்றும் 'ஒரே சூரியன், ஒரே உலகம் ஒரே தொகுப்பு முன்னெடுப்பு' என்னும் இரண்டு புதிய முன்னெடுப்புகளை சர்வதேச சூரியசக்தி கூட்டணி தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் சூரிய ஒளி எரிசக்தி துறையில் ஒரு புரட்சியை இவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கொவிட்-19 ஊரடங்கு உள்ளிட்ட இடர்பாடுகளின் போதும் இந்தியாவின் வேளாண் (அது தொடர்பான செயல்பாடுகள்) துறை தனது வளர்ச்சியை 3.4% அதிகரித்திருப்பதோடு 2020-2021 ஆம் ஆண்டில் விலையை நிலையாக வைத்திருந்தது.

2019-20 ஆம் நிதியாண்டில் வேளாண் மற்றும் அது தொடர்பான துறை நாட்டின் ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதலில் தனது பங்கை 17.8% அளவுக்கு அதிகரித்தது.

2018-19 ஆம் ஆண்டைக் காட்டிலும், 2019-20 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தி 11.44 மில்லியன் டன்னாக இருந்தது.

2019-20 ஆம் நிதியாண்டில் ₹13,50,000 கோடியை காட்டிலும், நாட்டின் இயல்பான வேளாண் கடனின் அளவு ₹13,92,469.81 கோடி ஆக இருந்தது. தற்போது 2020-21 ஆம் நிதியாண்டில் இதன் இலக்கு ₹15,00,000 நிர்ணயிக்கப்பட்டு நவம்பர் 30, 2020 வரை ₹ 9,73,517.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

2020 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவித்தபடி பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 கோடி பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் & பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2021 ஜனவரியில் இதுவரை 44,673 மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4.04 லட்சம் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5.5 கோடி விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஜனவரி 12-ந் தேதி வரை ₹90,000 கோடி காப்பீட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் மட்டும் ₹8741.30 கோடி அளவுக்கு காப்பீட்டு பலன்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு மூலம் 70 லட்சம் விவசாயிகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

2020 டிசம்பரில் மட்டும் பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 7-வது தவணையாக ₹18,000 கோடி ரூபாய் 9 கோடி விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

2011-12 முதல் 2018-19 வரையிலான 5 ஆண்டுகளில் உணவுப்பதப்படுத்துதல் நிறுவனங்கள் துறை ஆண்டுதோறும் 9.99% வளர்ச்சி அடைந்து வருவதோடு வேளாண் துறையில் 3.12% வளர்ச்சியும், உற்பத்தித் துறையில் 8.25%-மும் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத் தொகுப்பு: ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு (மே முதல் ஆகஸ்ட் வரை) 8 கோடி புலம்பெயர்ந்தவர்களுக்கு ₹3109 கோடி அளவுக்கு உணவுத் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில் துறை உற்பத்திக் குறியீடும், நாட்டின் வி-வடிவ பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தது

தொழில் துறை உற்பத்திக் குறியீடும், கொரோனாவுக்கு முந்தைய அளவை எட்டியது.

எளிதில் தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 63-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு 77 ஆம் இடத்தில் இந்தியா இருந்தது. முன்னேறிய முதல் 10 நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து 3-வது முறையாக 7-வது இடத்தை பிடித்தது.

கொவிட்-19 ஊரடங்கு காலத்தின் போது இந்தியாவின் சேவைத் துறை 2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 16% அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் பாதிப்படைந்த நிலையில் இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி 34% அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் $23.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு எட்டியுள்ளது.

இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு சேவைத் துறையில் 54%-க்கும் மேலாக உள்ளது.

அண்மைக் காலங்களில் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை காட்டிலும், சேவைத் துறை ஏற்றுமதியின் அளவு 48% அளவுக்கு உயர்ந்துள்ளது

ஏற்றுமதி, இறக்குமதி போன்ற சரக்குகளை கையாள்வதில் ஏற்படும் நேரம் 2010-11 ஆம் ஆண்டில் இருந்த 4.67 நாட்களிலிருந்து 2019-20 ஆண்டில் 2.62 நாட்களாக குறைந்துள்ளது.

கொவிட்-19 தொற்று காலத்திலும், நாட்டில் தொழில் தொடங்கும் சூழல் வளர்ந்துள்ளது. 38 நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவில் 12 புதிய நிறுவனங்கள் கடந்த ஆண்டில் தொழிலை தொடங்கி உள்ளன.

கடந்த 60 ஆண்டுகளில் இந்திய விண்வெளித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. விண்வெளித் துறையில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல், தனியாரை அனுமதித்தல் போன்ற சீர்திருத்தத்தின் கீழ் 2019-20 ஆம் நிதியாண்டில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்திற்காக $1.8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது.

189 நாடுகளை கொண்ட மனிதவள மேம்பாட்டு பட்டியலில் இந்தியா 2019 ஆம் ஆண்டு 131-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய வருவாய் & தனிநபர் வருவாய் 2018 ஆம் ஆண்டில் $6,427-அமெரிக்க டாலராகவும், 2019 ஆம் ஆண்டில் $6,681 அமெரிக்க டாலராகவும் இருக்கிறது. இதே போல் தனி மனித சராசரி வாழ்நாள் அளவு 2018-ல் 69.4 ஆண்டாகவும், 2019-ல் 69.7 ஆண்டாகவும் உயர்ந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் 182-லிருந்து 20 ரூபாய் அதிகரித்து 202 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

நியமனங்கள்

ஸ்டேட் ஃபாங்க் ஆஃப் இந்தியா ( State Bank of India (SBI)) வங்கியின் மேலாண் இயக்குநர்களாக சுவாமிநாதன் ஜானகிராமன் மற்றும் அஸ்வினி குமார் திவாரி ஆகியோர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முக்கிய தினங்கள்

மகாத்மா காந்தியடிகளின் 74-ஆவது நினைவு தினம் 30-1-2021 அன்று அனுசரிக்கப்பட்டது.

உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் (World Neglected Tropical Diseases Day) - ஜனவரி 30

தியாகிகள் தினம் (Martyrs’ Day) - ஜனவரி 30

சர்வதேச புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் (World Neglected Tropical Diseases Day) - ஜனவரி 30 ஐ முன்னிட்டு, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, உலகெங்கும் இருக்கும் 50 முக்கிய சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய சின்னங்களுள் ஒன்றான குதுப்மினார் (Qutub Minar ) 2021 ஜனவரி 30 அன்று மின்னொளியில் ஜொலிக்கும்.

அறிவியல் & தொழில்நுட்பம்

'ஸ்ரீ சக்தி சாட்' என்ற பெயரிலான செயற்கைக்கோளை கோவையிலுள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளனர். . இந்த செயற்கைக்கோள் வரும் பிப். 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது.இதற்காகக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைத்தளக் கட்டுப்பாட்டு மையத்தை, இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் இணையம் வழியாகத் திறந்து வைத்தார்.ரூ. 2.5 கோடி மதிப்பில் 'ஸ்ரீ சக்தி சாட்' என்று பெயரிடப்பட்டு இந்த PSLV C-51 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 460 கிராம் மட்டுமே எடையுள்ளது. ஆனால், 10 கிலோ வரை எடையுள்ள மற்ற நானோ செயற்கைக்கோள்களைப் போலச் செயல்படும் திறன் கொண்டது. இது பூமியிலிருந்து 500 - 575 கி.மீ. தூரத்தில் சுற்றுவதால் லியோ செயற்கைக்கோளாகவும் உள்ளது.

விளையாட்டுகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா (32) ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டுள்ளார் . முன்னதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவா் நஜ்முல் ஹசன் இருந்தாா்.

☞ சர்வதேச ரூரல் கேம்ஸ் மற்றும் ஸ்போட்ஸ் ஃபெடரேஷன் சார்பில் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ- நேபாள் விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு வேதாரண்யத்தை சேர்ந்த இளைஞர் வசிஷ்ட் விக்னேஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.